சிறுபாணாற்றுப்படை - அறிமுகம்

மிழ் மொழியின் தொன்மை

இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல்[1]. அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், “என்ப”, “மொழிப”, ”கூறுப”, “என்மனார் புலவர்” என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்.  இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன. அந்தச் செய்யுள்கள் அனைத்தும் யாப்பிலக்கணத்துக்கேற்ப இயற்றப்பட்ட தனிப்பாடல்கள்.

 

தொல்காப்பியம்

பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள் என்று இருவகையாகத் தொல்காப்பியம் பிரிக்கிறது. திணை என்ற சொல் ‘நிலம்’, ‘இடம்’, ’குடி’, ‘ஒழுக்கம்’, ‘பொருள்’ என்ற பல பொருள்களையுடைய ஒருசொல். தமிழ் இலக்கியத்தில் திணை என்ற சொல் ‘பொருள்’ என்பதைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம், புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கண மரபு. ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் பொழுதும், அவர்களின் திருமணத்திற்குப் பிறகும், தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவையாகையால், அவை அகப்பொருள் எனப்படும். அகப்பொருளை பற்றிப் பாடும் பாடல்கள் அகத்திணையில் அடங்கும். காதலைத் தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர், வீரம், வெற்றி, புகழ், கொடை, நிலையாமை முதலிய பொருள்களை மையப்பொருளாகக்கொண்ட பாடல்கள் புறத்திணையில் அடங்கும்.

 

சங்க இலக்கியம்

சங்க காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்கின்றனர். சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள் புலவர்களுக்கு ஆணையிட்டனர்.  தொல்காப்பியம் வகுக்கும் இலக்கணத்துகேற்ப புலவர்கள் அந்தப் பாடல்களைப் பதினெட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். சிறிய பாடல்களில் சிறந்தவற்றை, எட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். அந்த எட்டு நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு. எட்டுத்தொகை என்ற சொல் இந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் பத்து நூல்களாக்கினார்கள். பத்துப்பாட்டில் உள்ள நூல்கள்:  திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம். பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்தொகையில் அடங்கிய எட்டு நூல்களும் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன.

 

சிறுபாணாற்றுப்படை

பாண் என்ற சொல்லுக்குப் பாட்டு என்று பொருள். பாடுபவர்கள் பாணர் என்று அழைக்கப்பாட்டார்கள். வாய் வழியே பாடுபவர்கள் இசைப்பாணர் என்றும், யாழ் என்னும் இசைக்கருவியைப் பயன்படுத்திப் படுபாவர்கள் யாழ்ப்பாணர் என்றும், சீறியாழ் என்னும் சிறிய யாழை இசைத்துப் பாடுவோர் சிறுபாணர் என்றும், பேரியாழ் என்னும் பெரிய யாழை இசைத்துப் பாடுவோர் பெரும்பாணர் என்றும் அழைக்கப்பட்டனர்.

 

பரிசு பெற்ற பாணர் முதலியோர் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தைத் தம் இனத்தைச் சார்ந்தவர்க்குக் கூறித் தம்மைப் போல் அவர்களும் பயன் பெற, தாம் பரிசுபெற்ற வள்ளல் அல்லது அரசனிடம் வழிப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும். இப்பாட்டில், நல்லியக்கோடன் என்ற மன்னனிடம் பரிசுபெற்ற பாணன் ஒருவன், வறுமையில் இருக்கும் சிறுபாணன் ஒருவனை ஆற்றுப்படுத்துகிறான். அதனால், இப் பாட்டு சிறுபாணாற்றுப்படை என்று அழைக்கப்படுகிறது. இப் பாட்டு கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர் மா. ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்[2].

சிறுபாணாற்றுப்படை 289 அடிகளைக்கொண்ட அகவற்பா என்னும் வகையைச் சார்ந்த பாட்டு. இப் பாட்டை இயற்றியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இவருடைய இயற்பெயர் தத்தன். இவருடைய பெயருக்குமுன் சிறப்புப் பொருளைத்தரும் ”ந” என்னும் எழுத்தையும், பெயருக்குப்பின், உயர்வைக் குறிக்கும் “ஆர்” விகுதியையும் சேர்த்து இவர் நத்தத்தனார் என்று அழைக்கப்பட்டார். சென்னைக்குத் தென்மேற்கில் இருந்த இடைக்கழி என்ற நாட்டில் இருந்த நல்லூர் என்ற ஊரில் இவர் பிறந்ததால் இவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. திருவள்ளுவமாலை என்ற நூலில் “ஆயிரத்து முந்நூற்று” என்று தொடங்கும் வெண்பாவை இயற்றிவர் பெயரும் நத்தத்தனார் என்றே காணப்படுகிறது. நத்தத்தம் என்னும் இலக்கண நூலை இயற்றியவர் பெயரும் நத்தத்தனார் என்று கூறப்படுகிறது. சிறுபாணாற்றுப்படையை இயற்றிய நத்தத்தனாரும் திருவள்ளுவமாலையில் உள்ள பாடலையும் நத்தத்தம் என்ற இலக்கண நூலையும் இயற்றியவரும் ஒருவரா என்பது ஆய்வுக்குரியது. 

 

பண்டைக் காலத்தில், திண்டிவனத்தைச் சார்ந்த பகுதி ஓய்மாநாடு என்று அழைக்கப்பட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் ஓய்மாநாட்டை ஆட்சி புரிந்த ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் என்னும் மன்னன். இவன் மாவிலங்கை என்னும் நகரத்தைத் தலைநகராகக்கொண்டு ஒய்மாநாட்டை ஆண்ட ஓவியர்குடி என்னும் சிறந்த அரசர்குடியில் தோன்றியவன். ”நல்லியக்கோடன் நன்றி மறவாதவன்;சி ற்றினம் சேராதவன்; இன்முகம் உடையவன்; இன்சொல் பேசுபவன்; அவனைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு அருள் புரிபவன்; சினம் கொள்ளாதவன்; தன் படைவீரர்கள் தளர்ச்சி அடையும்பொழுது அவர்களுக்குத் துணையாக இருப்பவன்; நினைத்ததை முடிக்கும் ஆற்றல் உடையவன்; பெண்களால் பெரிதும் விரும்பப்படும் தன்மையன்; பெண்கள் வசப்படாதவன்; பெண்களின் வருத்தத்தை அறிந்து அதனைப் போக்குபவன்; அவர்களைப் பாதுகாக்கும் இயல்பை உடையவன்; அறிவு குறைந்தவர்கள் முன்பு தானும் அவர்களைப்போல் அறிவில் குறைந்தவனாகவும் அறிவு மிகுந்தவர்கள் முன்பு அறிவில் சிறந்தவனாகவும் காட்சி அளிப்பவன்; பரிசிலரின் தகுதி அறிந்து அவர்களின் தகுதிக்கேற்ப பரிசுகளை எல்லையில்லாமல் வாரி வழங்குபவன்.” என்று நத்தத்தனார் நல்லியக்கோடனின் நல்லியல்புகளை நயம்படக் கூறுகிறார்.

 

வேனிற்காலத்தில் காலைக் கிழிக்கும் வெப்பான பரற்கற்கள் உள்ள வழியில் நடந்துவந்த விறலியின் நிலை, அவள் அழகு, சேர சோழ பாண்டிய நாடுகளின் சிறப்பு, கடையெழு வள்ளல்களின் சிறப்பு, நல்லியக்கோடனின் சிறப்பு, ஓய்மாநாட்டின் தலைநகரமாகிய மாவிலங்கையின் சிறப்பு, மாவிலங்கைக்குச் செல்லும் வழியில் உள்ள நெய்தல், முல்லை மருத நிலங்களின் சிறப்பு, எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் ஆகிய ஊர்களில் உள்ள மக்களின் உபசரிப்பு, நல்லியக்கோடனின் நற்பண்புகள், நல்லியக்கோடன் உபசரிக்கும் பாங்கு, நல்லியக்கோடன் அளிக்கும் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றைப் பற்றிய புலவர் நத்தத்தனாரின் வருணனை, படிப்போர் உள்ளத்தைக் கவரும் வகையில், ஒரு சிறந்த திரைப்படம்போல் அமைந்துள்ளது.



[1] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 5

[2]. சங்க இலக்கிய வரலாறு – மா.ரா. களஞ்சியம் (பக்கம் 210), காவ்யா பதிப்பகம், சென்னை


Comments

Popular posts from this blog

சிறுபாணாற்றுப்படை மூலமும் எளிய உரையும்

சிறுபாணாற்றுப்படை - பொருட்சுருக்கம்