சிறுபாணாற்றுப்படை மூலமும் எளிய உரையும்

 

சிறுபாணாற்றுப்படை மூலமும் எளிய உரையும்

 

நிலமகளின் தோற்றம்

 

மணிமலை பணத்தோள் மாநில மடந்தை

அணிமுலை துயல்வரூஉம் ஆரம் போலச்

செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்றுக்

கொல்கரை நறும்பொழில் குயில்குடைந்து உதிர்த்த

புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்                          5             

 

கதுப்பு விரித்தன்ன காழக நுணங்குஅறல்

 

அருஞ்சொற்பொருள்:

1.மணிமலை = மணிகளையுடைய மலை; பணை = மூங்கில்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்; மா = பெரிய; மடந்தை = பெண்(நிலமகள்)

2. அணி = அழகிய; துயல்தல் = அசைதல்; துயல்வரூஉம் = அசைகின்ற; ஆரம் = மாலை

3. புனல் = நீர்; உழந்த = வருந்த; சேய் = தொலைவு; கான் =காடு

4. கொல்கரை =அழிகின்ற கரை (ஆற்று நீரால் இடிக்கப்படும் கரை); நறும் பொழில் = நறுமணமுள்ள சோலை

5. செம்மல் = சாதிப்பூ; புடை = பக்கம்; நெறித்து = சுருண்டு

6. கதுப்பு = கூந்தல்; காழ் = கருமை; நுணங்கு = நுண்ணிய; அறல் = கருமணல்

பதவுரை:

1.மணிமலை பணத்தோள் மாநில மடந்தை = மணிகளையுடைய மலைகளும் மூங்கில் போன்ற தோள்களையுமுடைய பெரிய நிலமகள்

 

2. அணிமுலை துயல்வரூஉம் ஆரம் போல = அழகிய முலைகளில் கிடந்து அசைகின்ற மாலைபோல

 

3. செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று = ஓடுகின்ற நீரால் வருந்திய, தொலைவிலிருந்து வருகின்ற காட்டாற்றின்

 

4. கொல்கரை நறும்பொழில் குயில்குடைந்து உதிர்த்த = இடிந்த கரையில் நறுமணமுள்ள சோலைகளில் உள்ள குயில்கள் (தம் அலகுகளால்) குடைந்து உதிர்த்த

 

5. புதுப்பூஞ் செம்மல் சூடிபுடை நெறித்து =       புதிய சாதிப்பூக்களைச் சூடிப் பக்கங்கள் சுருண்டு

                                               

6. கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் = மயிர் விரித்ததைப் போன்ற கருநிறத்தைத் தன்னிடத்தே கொண்ட நுண்ணிய கருமணல்

 

கருத்துரை:

பெரிய நிலமாகிய பெண், மணிகளையுடைய மலைகளாகிய அழகிய முலைகளும், மூங்கிலாகிய தோள்களுமுடையவள். அவளுடைய அழகிய முலைகளில் கிடந்து அசைகின்ற மாலையைப் போல், ஓடிவருகின்ற நீரானது, தொலைவிலிருந்து வருகின்ற காட்டாற்றோடு கலக்கும். அந்தக் காட்டாற்றின்   கரையில் நறுமணமுள்ள சோலைகள் உள்ளன. அந்தச் சோலைகளில் உள்ள குயில்கள் (தம் அலகுகளால்) குடைந்து உதிர்த்த புதிய சாதிப்பூக்களைச் சூடிய, பக்கங்கள் சுருண்ட நிலமகளின் கூந்தல் விரிந்து கிடப்பதைப் போல் ஆற்றின் கரையில் உள்ள நுண்ணிய கருமணல் இருக்கும்.

 

 

                                                     

 

                                                     இளைப்பாறும் பாணன்

 

அயில் உருப்பு அனைய ஆகி, ஐது நடந்து

வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப,

வேனில் நின்ற வெம்பத வழிநாள்

காலை ஞாயிற்று கதிர்கடா உறுப்ப          10                                           

 

பாலை நின்ற பாலை நெடுவழி

சுரன் முதல் மராஅத்த வரிநிழல் அசைஇ

 

அருஞ்சொற்பொருள்:

7. அயில் = இரும்பு; உருப்பு = வெப்பம்; அனைய = போன்ற; ஐது = மெல்ல

 

8. உருப்பு = வெப்பம்; வெம்பரல் = வெப்பமான பரற்கற்கள்

 

9. வேனில் = வேனிற்காலம் (கோடைக்காலம்); வெம்பதம் = வெப்பத்தன்மை; வழிநாள் = பின்வரும் நாட்கள்

 

10. கடுத்தல் = வெம்மையாதல்; கதிர் கடா = வெப்பத்தைச் செலுத்த; உறுப்ப = மிகுதியாக

 

11. பாலை = பாலைத் தன்மை; நின்ற = நிலைபெற்ற; நெடுவழி = நெடியவழி

 

12. சுரன் = சுரம் = காடு; மராஅம் = கடம்பமரம்; மராஅத்து = கடம்பமரத்து; வரிநிழல் = வரிகளாக உள்ள நிழல்; அசைஇ = தங்கி

 

பதவுரை:

7. அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து = இரும்பின் வெப்பம் போன்ற தன்மையுடைய கருமணலில்   மெல்ல நடந்து சென்று

 

8. வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப = வெயிலின் வெப்பம் ஏறிய சூடான பரற்கற்கள் காலைக் கிழிக்க

 

9. வேனில் நின்ற வெம்பத வழிநாள் = இளவேனிற்காலம் நிலைபெற்ற வெம்மையான நிலைக்கு அடுத்துவரும் நாட்களில் (முதுவேனிற்காலத்தில்)

 

10. காலை ஞாயிற்று கதிர்கடா உறுப்ப = காலைக் கதிரவனின் கதிர்கள் வெம்மையைச் செலுத்துவதால்

 

11. பாலை நின்ற பாலை நெடுவழி = பாலைத் தன்மை நிலைபெற்ற பாலை நிலத்தில் நீண்ட வழியையுடைய

 

12. சுரன் முதல் மராஅத்த வரிநிழல் அசைஇ = காட்டுப் பாதையில் உள்ள கடம்ப மரத்தின் வரிகளாக உள்ள நிழலில் தங்கி

 

கருத்துரை:

அந்தக் கருமணலில் உள்ள சூடான பரற்கற்கள் தங்கள் கால்களைக் கிழித்து வருத்துவதால், வறுமையில் வாடும் ஒரு பாணனும் அவன் சுற்றத்தாரும் மெல்ல நடந்து செல்கின்றார்கள். இளவேனிற்காலத்திற்கு அடுத்துவரும் முதுவேனிற்காலத்தில், காலைக் கதிரவனின் கதிர்கள் வெப்பத்தை மிகுதியாகச் செலுத்துவதால், பாலைத் தன்மை நிலைபெற்ற பாலை நிலத்தில் நீண்ட வழியையுடைய காட்டுப் பாதையில் உள்ள கடம்ப மரத்தின் வரிகளாக உள்ள நிழலில் தங்கி இளைப்பாறுகிறார்கள்.

 

 

       

             விறலியரின் அழகு

 

ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி

நெய்கனிந்து இருளிய கதுப்பின் கதுப்புஎன

மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன்                                15

 

மயில்மயில் குளிக்கும் சாயல் சாஅய்

உயங்குநாய் நாவின் நல்எழில் அசைஇ

வயங்குஇழை உலறிய அடியின் அடி தொடர்ந்து

ஈர்ந்துநிலம் தோயும் இரும்பிடித் தடக்கையின்

சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என                  20

 

மால் வரை ஒழுகிய வாழை வாழை

பூ எனப் பொலிந்த ஓதி ஓதி

நளிச்சினை வேங்கை நாள்மலர் நச்சிக்

களிச்சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து

யாணர்க் கோங்கின் அவிர்முகை எள்ளிப்                             25

 

பூண்அகத்து ஒடுங்கிய வெம்முலை முலைஎன

வண்கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்

இன்சேறு இகுதரும் எயிற்றின் எயிறுஎன

குல்லைஅம் புறவில் குவி முகை அவிழ்ந்த

முல்லை சான்ற கற்பின் மெல் இயல்                                       30

 

மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்

நடை மெலிந்து அசைஇய நல்மென் சீறடி

கல்லா இளையர் மெல்லத் தைவர

 

அருஞ்சொற்பொருள்:

13. ஐது =மெல்ல; வீழ்தல்= விழுதல்; இகுதல் = சொரிதல், விழுதல்; பெயல் = மேகம்

 

14. கனிதல் = கரைதல் (தடவிய); இருளிய = இருண்ட; கதுப்பு = கூந்தல்; என = போன்ற

 

15. மணி = நீலமணி; வயின் = இடம்; கலாபம் = தோகை

 

16. குளிக்கும் = மறைக்கும்; சாயல் = அழகு; சாஅய் = சாய் = அழகு

 

17. உயங்குதல் = வருந்துதல்; எழில் = அழகு; அசைஇ = வருத்தி

 

18. வயங்குதல் = விளங்குதல்; இழை = அணிகலன்; உலறிய =இல்லாத (அணியப்பெறாத)

 

19. ஈர்ந்து = இழுக்கப்பட்டு; தோயும் = பொருந்தும்; இரும் = கரிய; பிடி =பெண்யானை; தடக்கை = துதிக்கை

 

20. செறிந்த =நெருங்கிய; குறங்கு = தொடை

 

21. மால் =மேகம்; வரை = மலை; ஒழுகிய = வரிசையாக

 

22. பொலிந்த = விளங்கிய; ஓதி = கூந்தல்

 

23. நளிதல் = செறிதல்; சினை = கிளை; வேங்கை = வேங்கை மரம்; நாள் மலர் = அன்று அலர்ந்த மலர்; நச்சி =விரும்பி

 

24. களி = தேன்; சுரும்பு = வண்டு; அரற்றும் = ஒலி எழுப்பும்; சுணங்கு = மஞ்சள் நிறமான தேமல்; பிதிர்ந்து = சிதறி

 

25. யாணர் = புதுமை; கோங்கு = கோங்க மரம்; அவிர்தல்= விளங்குதல்; முகை = மொட்டு; எள்ளி = இகழ்ந்து

 

26. பூண் = அணிகலன்; வெம்மை = விருப்பம்; வெம்முலை = விருப்பம் தருகின்ற முலை; என = போன்ற

 

27. வண் = மிகுதி (பெரிய); கோள் = குலை; பெண்ணை = பனை மரம்

 

28. இகுதரும் = பொழியும்; எயிறு =பல்

 

29. குல்லை = கஞ்சங்குல்லை; புறவு = முல்லை நிலம்; குவி = குவிந்த; முகை = மொட்டு; அவிழ்ந்த = மலர்ந்த

 

30. சான்ற =சான்றாக

 

31. மடமான் = மடப்பம் பொருந்திய மான்; வாள்நுதல் = ஒளி பொருந்திய நெற்றி; விறலியர் =

நாட்டியமாடும் பெண்டிர்

 

32. அசைஇய = தளர்ந்து; சீறடி = சிறிய அடி

 

33. கல்லா = பாடும் தொழிலன்றி வேறு எதுவும் கற்காத; இளையர் = இளைஞர்; தைவருதல் = தடவுதல்

 

பதவுரை:

13. ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி = மெல்லிதாய் வீழ்ந்து தாழ்கின்ற மழையின் அழகை ஏற்றுக்கொண்டு, காட்சிக்கு விருந்தாக அருளுதலைச் செய்து

 

14. நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என = எண்ணெய் தடவிய கரிய கூந்தலையும், கூந்தலைப் போன்ற,

 

15. மணி வயின் கலாபம் பரப்பிப் பலவுடன் =  நீலமணி போன்ற கண்களையுடைய தோகைகளை விரித்து, பலவும் ஒருசேர

                                               

16. மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய் = ஆண்மயில்கள் - அம்மயில்கள் தம் தோகைகள் விறலியரின் கூந்தல் அழகுக்கு ஒப்பாகாமையால் நாணி மறைந்துகொள்வதற்குக் காரணமான அழகும்

 

17. உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ = ஓடி இளைத்து வருந்துகின்ற நாயின் நாக்கைப் போல நல்ல அழகினைப் பெற்று,

 

18. வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து = ஒளிரும் அணிகலன்கள் இல்லாத அடியினையும்; அடிகளோடு தொடர்புடைய,

 

19. ஈர்ந்து நிலம் தோயும் இரும்பிடித் தடக்கையின் = இழுக்கப்பட்டு நிலத்தில் பொருந்தும் கரிய பெண்யானையின் பெரிய துதிக்கையைப் போல

 

20. சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என = திரண்டு, ஒருங்கே நெருங்கி இணைந்த தொடைகளையும்; தொடை போன்ற           

               

21. மால் வரை ஒழுகிய வாழை வாழை = மேகங்கள் தவழும் மலையில் வளரும் வாழை - அவ்வாழையின்

 

22. பூ எனப் பொலிந்த ஓதி ஓதி = பூவைப்போல் பொலிவு பெற்ற கூந்தல் முடிப்பினையும்; அக் கூந்தல் முடிப்பில் சூடுகின்ற

 

23. நளிச் சினை வேங்கை நாள் மலர் நச்சி = செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றைய மலர் என்று நினைத்து விரும்பி,

 

24. களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து = தேனை உண்டு களித்த வண்டுகள் ஆரவாரிக்கும் தேமல்களையும், அப் பூந்தாதுகள் சிதறிக்கிடக்கும்

 

25. யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளி =    புதிதாகப் பூக்கும் கோங்கின் ஒளிரும் மொட்டுகளை இகழ்ந்து,

                                                                               

26. பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை முலை என = அணிகலன்களின் அகத்தே ஒடுங்கிக் கிடக்கும் விருப்பம் தருகின்ற முலையினையும், அம்முலைகளைப் போன்ற

 

27. வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் = பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கில் உள்ள

 

28. இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என = இனிய நீர் வடிகின்ற பற்களையும், அப்பற்களைப் போல

 

29. குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த = கஞ்சங்குல்லை பூத்திருக்கும் அழகிய முல்லை நிலத்தில் குவிந்த அரும்புகள் மலர்ந்த

 

30. முல்லை சான்ற கற்பின் மெல் இயல் = முல்லை மலர்களைச் சூடுதற்கமைந்த கற்புடைமையும், மெல்லிய இயல்பினையும்

                                                                                               

31. மட மான் நோக்கின் வாள்நுதல் விறலியர் = மடப்பத்தையுமுடைய மான் போன்ற பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையுமுடைய விறலியரின்

 

32. நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி = நடையால் இளைத்து ஓய்ந்த நல்ல மெல்லிய சிறிய அடிகளை

 

33. கல்லா இளையர் மெல்லத் தைவர = பாடுவதைத் தவிர வேறு எதுவும் கற்காத இளைஞர் மெதுவாகத் தடவ

 

கருத்துரை:

மெதுவாகத் துளித்துளியாக மழை பெய்யும் கரிய மேகத்தைப் போல் கரிய நிறத்தையும் அழகையும் கொண்டது எண்ணெய் தடவிய விறலியர் கூந்தல். அந்த விறலியரின் கூந்தலைப் போன்ற, நீலமணி போன்ற கண்களையுடைய தோகைகளை விரித்து, ஒன்றுசேர்ந்து ஆடும் ஆண்மயில்கள் தம் தோகைகள் விறலியரின் கூந்தல் அழகுக்கு ஒப்பாகாமையால் நாணிப், பெண்மயில்களின் கூட்டத்துக்குள் மறைந்துகொள்வதற்குக் காரணமான அழகுடையவர்கள் விறலியர்.  இத்தகைய அழகிய விறலியரின் பாதங்கள், ஓடித் தளர்ந்து வருந்துகின்ற நாயின் நாக்கைப் போல நல்ல அழகினைப் பெற்று, ஒளிரும் அணிகலன்கள் இல்லாமல், பொலிவிழந்து காணப்படும். அந்தப் பாதங்களைத் தொடர்ந்து, விறலியரின் தொடைகள் கரிய பெண்யானையின் தரையில் படுகின்ற பெரிய துதிக்கையைப் போலத் திரண்டு, ஒருங்கே நெருங்கி இணைந்திருக்கும். அந்தத் தொடைகளைப் போலத் திரண்டு, மேகங்கள் தவழும் மலையில் வளரும் வாழையின் பூவைப்போல் விறலியரின் பொலிவு பெற்ற கூந்தல் முடிப்புகள் இருக்கும். விறலியர் அக் கூந்தல் முடிப்பில், செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்று அலர்ந்த மலர்களைச் சூடியிருப்பர். அந்த மலர்களை விரும்பி, அவற்றின் தேனை உண்டு களித்த வண்டுகள், விறலியரின் உடலில் உள்ள மஞ்சள் நிறமான தேமலை மலர் என்று நினைத்து ஆரவாரிக்கும். அவ் விறலியரின் அணிகலன்களின் அகத்தே ஒடுங்கிக் கிடக்கும், விருப்பம் தருகின்ற முலைகள், அவர்களின் உடலில் மஞ்சள் தேமல் சிதறிக்கிடப்பதைப்போல் புதிதாகப் பூத்த கோங்க மரத்தின் ஒளிரும் மொட்டுகளை எள்ளி நகையாடும். அம் முலைகளைப் போன்ற பெரிய குலையினையுடைய பனையின் நுங்கில் உள்ள இனிய நீரைவிட அவ் விறலியரின் பற்களிலிருந்து வடிகின்ற ஊறல் இனிமையானதாக இருக்கும்.  அப் பற்களைப் போன்ற கஞ்சங்குல்லை மலர்கள் நிறைந்த அழகிய முல்லை நிலத்தில், குவிந்த அரும்புகள் மலர்ந்த முல்லை மலர்களைச் சூடுதற்கமைந்த கற்பும், மெல்லிய இயல்பும், மடப்பமும், மான் போன்ற பார்வையும், ஒளியுள்ள நெற்றியுமுடைய, விறலியரின் நடையால் இளைத்து ஓய்ந்த நல்ல மெல்லிய சிறிய அடிகளைப் பாடுவதைத் தவிர வேறு எதுவும் கற்காத இளைஞர் மெதுவாகத் தடவுகின்றனர்.

சிறப்புக் குறிப்பு: விறலியரின் அழகை வருணிக்கும்பொழுது, ஒரு கருத்தைக் கூறி அதன் தொடர்ச்சியாக அடுத்த கருத்தைப் புலவர் நத்தத்தனார் குறிப்பிடுகிறார்.  இவ்வாறு ஒன்றைக்கூறி முடித்த பின்னர் அதில் உள்ள பொருளையே மீண்டும் உவமையாக எடுத்து நிரல்படக் கூறுவது ஒற்றைமணிமாலை என்று அழைக்கப்படுகிறது[1].

 

பரிசில் பெற்ற பாணன் பரிசில் தருவோரைத்

தேடிச் செல்லும் பாணனைச் சந்திக்கிறான்

 

பொன் வார்ந்தஅன்ன புரியடங்கு நரம்பின்

இன் குரல் சீறியாழ் இட வயின் தழீஇ                                                     35

 

நைவளம் பழுநிய நயம்தெரி பாலை

கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க

இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ

துனிகூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப

முனிவு இகந்திருந்த முதுவாய் இரவல                                                   40

 

 

அருஞ்சொற்பொருள்:

34.பொன் வார்ந்து = பொன்னை உருக்கிச் செய்து; அன்ன = போன்ற; புரி = முறுக்கிய

 

35. இன் குரல் = இனியகுரல்; சீறியாழ் = சிறிய யாழ்; இட வயின் = இடப்பக்கம்; தழீஇ = தழுவி

 

36. நைவளம் = நட்ட பாடை என்னும் பண்; பழுநிய = முற்றிய; நயம் = இன்பம்; தெரி = தெரிகின்ற; பாலை = பாலை யாழ்

 

37. கை வல் = கைதேர்ந்த; பாண்மகன் =பாணன்; கடன் = முறைமை; இயக்க = வாசிக்க வல்ல

 

38. இயங்கா = அசையாத; வையத்து = உலகத்து (வையம் என்ற சொல்லுக்கு வண்டி என்று ஒரு பொருள் உண்டு. வண்டி இயங்கக் கூடியது, அதாவது குதிரை மாடு ஆகியவற்றால் இழுக்கப்பட்டால் அது அசையும் இயல்புடையது. ஆனால், உலகம் வண்டியைப்போல இழுத்துச் செல்ல முடியாததாகையால், இங்கு, ’இயங்கா வையம்’ என்பது உலகத்தைக் குறிக்கிறது); வள்ளியோர் = பரிசில் தருவோர்; நசைஇ = விரும்பி

 

39. துனி = வெறுப்பு; கூ ர் = மிக்க; எவ்வம் = வருத்தம்; ஆற்றுப்படுத்தல் = வழிப்படுத்தல்

 

40. முனிவு = வருத்தம்; இகந்திருந்த = தீர்ந்திருந்த; முது = பேரறிவு; வாய் = வாய்த்த

 

 பதவுரை:

34. பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் = பொன்னை உருக்கிச் செய்த கம்பியைப் போன்ற முறுக்கிய நரம்பின்

 

35. இன் குரல் சீறியாழ் இட வயின் தழீஇ = இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தில் தழுவி,                                                     

 

36. நைவளம் பழுநிய நயம் தெரி பாலை = நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை

 

37. கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க = இயக்குவதில் வல்ல பாணன் முறைமையை அறிந்து இயக்க,

 

38. இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ = உலகத்தில் புரவலரை விரும்பி

 

39. துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப =வள்ளல்கள் இல்லாததால் வெறுப்பு மிக்க வருத்தத்தோடுகூடிய வறுமை உன்னைக் வழிப்படுத்துவதால்

 

40. இகந்திருந்த முது வாய் இரவல =      (நடந்து வந்தததால் வந்த) வருத்தம் தீர்ந்து இளைப்பாறும் பேரறிவு வாய்க்கப்பெற்ற இரவலனே                                                                    

 

கருத்துரை:

பொன்னை உருக்கிச் செய்த கம்பியைப் போன்ற முறுக்கிய நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தில் தழுவிப் பாலை என்னும் பண்ணை இயக்குவதில் வல்ல பாணன் முறைமையை அறிந்து இயக்கிக்கொண்டிருக்கிறான். அவனை நோக்கி, பரிசுபெற்ற பாணன், “புரவலரை விரும்பி, வருத்தத்தோடுகூடிய வறுமை உன்னை வழிப்படுத்துவதால், நடந்து வந்த வருத்தம் தீர்ந்து இளைப்பாறும் பேரறிவுடைய இரவலனே!” என்று கூறுகிறான்.                                                                         

 

சேர நாட்டின் வளம்

 

கொழுமீன் குறைய ஒதுங்கி வள்இதழ்

கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை

பைங்கறி நிவந்த பலவின் நீழல்

மஞ்சள் மெல்இலை மயிர்ப்புறம் தைவர

விளையா இளங்கள்நாற மெல்குபு பெயரா                          45

 

குளவிப் பள்ளி பாயல் கொள்ளும்

குட புலம் காவலர் மருமான் ஒன்னார்

வடபுல இமயத்து வாங்குவில் பொறித்த

எழுஉறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்

வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே; அதாஅன்று            50

 

 

அருஞ்சொற்பொருள்:

41. கொழு = கொழுத்த; குறை = துண்டு; ஒதுங்கி = நடந்து; வள் இதழ் = வளமான இதழ்

 

42. கழுநீர் =செங்கழுநீர்; மேய்ந்த = தின்ற; கயம் = பெருமை; கயவாய் = பெரியவாய்

 

43. கறி = மிளகுக்கொடி; பைங்கறி = பசுமையான மிளகுக்கொடி; நிவந்த = படர்ந்த; பலவின் = பலா மரத்தின்; நீழல் = நிழல்

 

44. மயிர்ப்புறம் = மயிரையுடைய முதுகு; தைவர = தடவ

 

45. இளங்கள் = புதிய தேன்; நாற = மணக்க; மெல்குபு = மென்று; பெயரா = அசையிட்டு

 

46. குளவி = காட்டு மல்லிகை; பள்ளி = படுக்கை; பாயல் = உறக்கம்

 

47. குடபுலம் = மேற்குத்திசை; மருமான் = வழித் தோன்றல்; ஒன்னார் = பகைவர்

 

48. வடபுலம் = வடக்குத்திசை; வாங்குவில் = வளைந்த வில்

 

49. எழு = கணைய மரம்; உறழ் = போன்ற; திணிதோள் = திண்மையான தோள்; இயல்தேர் = செல்லுகின்ற தேர்; குட்டுவன் = சேர மன்னன்

 

50. வரு = வருகின்ற; புனல் = நீர்; வருபுனல் = ஆற்றுநீர்; வாயில் = வாசல்; வறிதே = சிறியதே; அதாஅன்று = அது மட்டுமன்று

 

பதவுரை:

41. கொழுமீன் குறைய ஒதுங்கி வள்இதழ் = கொழுத்த மீன் வெட்டுப்படும்படி நடந்து, வளமான இதழையுடைய

 

42. கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை = செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை

 

 

43.பைங்கறி நிவந்த பலவின் நீழல் = பசுமையான மிளகுக்கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்

 

 

44. மஞ்சள் மெல்இலை மயிர்ப்புறம் தைவர = மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகைத் தடவ

 

45. விளையா இளங்கள்நாற மெல்குபு பெயரா  = முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து

                                               

46. குளவிப் பள்ளி பாயல் கொள்ளும் = காட்டு மல்லிகையாகிய படுக்கையில் உறங்கும்

 

47. குட புலம் காவலர் மருமான் ஒன்னார் = மேற்றிசையில் உள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியில் பிறந்தவன் பகைவருடைய

 

48. வடபுல இமயத்து வாங்குவில் பொறித்த =வடதிசையில் உள்ள இமயத்தில் வளைந்த வில்லைப் பொறித்த

 

49. எழுஉறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன் = கணைய மரத்தைப் போன்ற தோளும், விரைந்து செல்லும்தேர்ப்படையும் உடைய குட்டுவன் (சேரன்)

 

50. வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே; அதாஅன்று = பெருகிவரும் ஆற்று நீரும் வாயிலையுமுடைய வஞ்சி நகரத்தில் கிடைக்கும் பரிசும் சிறிதானதாகவே இருக்கும். அது மட்டுமன்று,                    

 

கருத்துரை:

கொழுத்த மீன்கள் வெட்டுப்படும்படி நடந்து, வளமான இதழையுடைய செங்கழுநீர்ப்பூவை மென்று தின்ற, பெரிய வாயையுடைய எருமை, பசுமையான மிளகுக்கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில், மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகைத் தடவ, முற்றாத இளைய தேன் மணக்கும்படி, அசைபோட்டு நடந்து, காட்டு மல்லிகையாகிய படுக்கையில் உறங்கும். அத்தகைய வளமான மேற்றிசையில் உள்ள நிலத்தைக் காக்கும் குடியில் பிறந்தவன் சேர மன்னன். அவன் பகைவருடைய வடதிசையில் உள்ள இமயத்தில் வளைந்த வில்லைப் பொறித்தவன்; கணைய மரத்தைப் போன்ற தோளையும், விரைந்து செல்லும் தேர்ப்படையையும் உடையவன். பெருகிவரும் ஆற்று நீரும் கோட்டைவாயிலுமுடைய அந்தச் சேரனுடைய வஞ்சி நகரத்தில் கிடைக்கும் பரிசும் சிறிதளவானதாகவே இருக்கும். அது மட்டுமன்று.         

 

பாண்டிய நாட்டின் சிறப்பு

 

நறவுவாய் உறைக்கும் நாகுமுதிர் நுணவத்து

அறைவாய் குறுந்துணி அயில் உளி பொருத

கைபுனை செப்பம் கடைந்த மார்பின்

செய்பூங் கண்ணி செவிமுதல் திருத்தி

நோன்பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த                         55

 

மகாஅர் அன்ன மந்தி மடவோர்

நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்

வாள்வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி

தோள்புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்

உளர்இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற                                     60

 

கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்

தத்துநீர் வரைப்பின் கொற்கை கோமான்

தென்புலம் காவலர் மருமான் ஒன்னார்

மண்மாறு கொண்ட மாலை வெண்குடை

கண்னார் கண்ணி கடுந்தேர்ச் செழியன்                                 65

 

தமிழ்நிலை பெற்ற தாங்குஅரு மரபின்

மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று

 

அருஞ்சொற்பொருள்:

51. நறவு = தேன்; வாய் = இடம்; உறைக்கும் = தெளிக்கும் (சொரியும், சொட்டும்); நாகு = இளமை; முதிர் =முதிர்ந்த; நுணவத்து = நுணா மரத்தின்

 

52. அறைவாய் = வெட்டிய வாய்; துணி = துண்டு; அயில் = இரும்பு, கூர்மை; பொருதல் = கடைதல், குடைதல்

 

53. கைபுனை =கையால் செய்த; செப்பம் = செம்மையாக

 

54. செய் பூங்கண்ணி = நெட்டியால் செய்த; செவிமுதல் = செவியின் அடியில்; திருத்தி = அணிந்து

 

55. நோன்மை = வலிமை; பகடு = எருது; உமணர் = உப்பு வணிகர்; ஒழுகை = வண்டி

 

56. மகாஅர் =மக்கள்; அன்ன = போன்ற; மந்தி =குரங்கு; மடவோர் = பெண்கள்

 

57. நகாஅர் = பல்; அன்ன = போன்ற; நளிதல் = செறிதல்; நளிநீர் = செறிந்த நீர், கடல்; முத்தம் = முத்து

 

58. வாள்வாய் =வாளின் வாய்; எருந்து = கிளிஞ்சல்; வயிற்றகத்து = வயிற்றினுள்

 

59. தோள்புறம் = முதுகுப்பகுதி; நல்கூர்தல்= துன்புறுதல் (இங்கு நுண்ணிய என்ற பொருளில் வந்துள்ளது); நுசுப்பு = இடை

 

60. உளர்தல் = அசைத்தல்; இயல் = இயல்பு; ஐம்பால் = ஐந்து பகுதிகளாகப் பின்னப்பட்ட பெண்களின் கூந்தல்; உமட்டியர் =உப்பு விற்கும் பெண் (உமணத்தி); ஈன்ற = பெற்ற

 

61. கிளர் = ஒளி; பூண் = அணிகலன்; கிலுகிலி = கிலுகிலுப்பை

 

62. தத்துதல் = பாய்தல்; தத்துநீர் = அலைபாயும் கடல்; வரைப்பு =எல்லை; கோமான் = மன்னன்

 

63. தென்புலம் = தெற்குப்பகுதி; மருமான் = வழித்தோன்றல்; ஒன்னார் = பகைவர்

 

64. மாறு = பகை

 

65.கண்ணார் = கண்ணுக்கு அழகாகத் தோன்றும்; கண்ணி = பூ மாலை; கடுந்தேர் = விரைந்து செல்லும் தேர்; செழியன் = பாண்டியன்

 

66. தாங்குஅரு = பொறுத்தற்கரிய

 

67. நனைதல் = தோன்றுதல்; மகிழ்நனை = மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும்; மறுகு = தெரு; வறிதே =குறைவானதே; அதாஅன்று = அது மட்டுமன்று

 

பதவுரை:

51. நறவுவாய் உறைக்கும் நாகுமுதிர் நுணவத்து = பூக்கள் தேனைச் சொரியும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்

 

52. அறைவாய் குறுந்துணி அயில் உளி பொருத = வெட்டுண்ட வாயையுடைய சிறிய மரக்கட்டைத் துண்டுகளில், கூர்மையான உளியால் செதுக்கி

 

53. கைபுனை செப்பம் கடைந்த மார்பின் = கைத்தொழில் திறத்தால் செம்மையாகக் கடைந்து செய்த மாலையை மார்பில் அணிந்து

 

54. செய்பூங் கண்ணி[2] செவிமுதல் திருத்தி = நெட்டியால் செய்த பூ மாலையைச் செவியடியில் சூடி

 

55. நோன்பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த = வலிமையான எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டியுடன் வந்த

                                                               

56. மகாஅர் அன்ன மந்தி மடவோர் = அவர்களின் பிள்ளைகளைப் போன்ற மந்தி, மடப்பத்தையுடைய மகளிர்

 

57. நகாஅர் அன்ன நளிநீர் முத்தம் = கடலில் கிடைக்கும் (பல் போன்ற) முத்துகளை

 

58. வாள்வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி = வாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் உள்ளே அடக்கிய

 

59. தோள்புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் = நுண்ணிய இடையினையுடைய, தோளையும் முதுகையும் மறைக்கின்ற

 

60. உளர்இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற = அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதிகளாகப் பின்னப்பட்ட கூந்தலையுடைய உமணத்தி பெற்ற                                                      

 

61. கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் = விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த பிள்ளைகளுடன் விளையாடும்

 

62. தத்துநீர் வரைப்பின் கொற்கை கோமான் = அலைபாயும் கடலை எல்லையாகக்கொண்ட கொற்கை மன்னனும்

 

63. தென்புலம் காவலர் மருமான் ஒன்னார் = தெற்கிலுள்ள நாட்டைக் காவல் புரியும் பாண்டியர் மரபில் தோன்றியவனும், பகைவருடைய

 

64. மண்மாறு கொண்ட மாலை வெண்குடை = பகைவர்களின் நிலத்தைக் கைப்பற்றியவனும், முத்துமாலை அணிந்த வெண்கொற்றக்குடையை உடையவனும்,

 

65. கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன் =     கண்ணுக்கு அழகான மாலையையுடையவனும் ஆகிய விரைந்து செல்லும் தேரையுடைய பாண்டியனின்                                             

 

66. தமிழ் நிலைபெற்ற தாங்குஅரு மரபின் = தமிழ் நிலைபெற்ற, பெருமைக்குரிய மரபையுமுடைய

 

67. மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று = மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் தெருவினையுடைய மதுரையில் பெறும் பரிசிலும் சிறிதே; அது மட்டுமன்று,

 

கருத்துரை:

உப்பு வாணிகரின் வண்டியை வலிமையான எருதுகள் இழுத்து செல்லும். அந்த வண்டியோடு உப்பு வாணிகரும், மெல்லிய இடையையும், தோளையும் முதுகையும் மறைக்கின்ற அசையும் இயல்புடைய ஐந்து பகுதிகளாகப் பின்னப்பட்ட கூந்தலையுமுடைய உமணத்தியரும் வருவர். தங்களின் பிள்ளைபோல் உமணனாலும் உமணத்தியாலும் வளர்க்கப்பட்ட குரங்கும் உப்பு வண்டியில் வரும். பூக்கள் தேனைச் சொரியும் இளமை முதிர்ந்த நுணா மரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட சிறிய மரத்துண்டுகளைக் கூர்மையான உளியால் குடைந்து கைத்தொழில் வல்லுநர் செம்மையாகக் கடைந்து செய்த மாலையை மார்பில் அணிந்து, நெட்டியால் செய்த பூமாலையைச் செவியடியில் அந்தக் குரங்கு சூடியிருக்கும். மடப்பத்தையுடைய மகளிரின் பற்களைப் போன்ற   முத்துகளை வாளின் வாய் போன்ற வாயையுடைய கிளிஞ்சிலின் உள்ளே அடக்கி, உமணத்தி பெற்ற, விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த பிள்ளைகளுடன் அதைக் கிலுகிலுப்பையாகக்கொண்டு அந்தக் குரங்கு விளையாடும்.

 

இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற, அலைபாயும் கடலை எல்லையாகக்கொண்ட கொற்கையின் மன்னன் தெற்கிலுள்ள நாட்டைக் காவல் புரியும் பாண்டியர் மரபில் தோன்றியவன்; பகைவருடைய நிலத்தை மாறுபாட்டால் கைக்கொண்டவன்; முத்துமாலை அணிந்த வெண்கொற்றக்குடையை உடையவன்; கண்ணுக்கு அழகான மாலைகளை அணிந்தவன்; விரைந்தோடும் தேர்களையுடையவன். பாண்டியனின் தமிழ் வீற்றிருக்கும், பெருமைக்குரிய மரபையுடைய, மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் தெருவினையுடைய மதுரையில் பெறும் பரிசிலும் சிறிதே; அது மட்டுமன்று,

 

 

 

 

    சோழநாட்டின் பெருமை

 

நறுநீர் பொய்கை அடைகரை நிவந்த

துறுநீர் கடம்பின் துணை ஆர் கோதை

ஓவத்து அன்ன உண்துறை மருங்கில்                                       70

 

கோவத்து அன்ன கொங்குசேர்பு உறைத்தலின்

வருமுலை அன்ன வண்முகை உடைந்து

திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை

ஆசுஇல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன

சேயிதழ் பொதிந்த செம்பொன் கொட்டை                         75

 

ஏம இன்துணை தழீஇ இறகு உளர்ந்து

காமரு தும்பி காமரம் செப்பும்

தண்பணை தழீஇய தளரா இருக்கை

குணபுலம் காவலர் மருமான் ஒன்னார்

ஓங்குஎயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்                        80

 

தூங்குஎயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை

நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்

ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று

 

 

அருஞ்சொற்பொருள்:

68. நறுநீர் = நறுமணமுள்ள நீர்; பொய்கை = நீர் நிலை; அடைகரை = அடைந்து நிற்கும் கரை;

நிவந்த = படர்ந்த

 

69. துறுதல் = நெருங்குதல்; கடம்பு = கடம்ப மரம்; துணை = இணை; ஆர் = நிறைவு;

கோதை = மாலை

 

70. ஓவம் = ஓவியம்; அன்ன = போன்ற; உண்துறை = குடிக்கும் நீரையுடைய துறை; மருங்கு = பக்கம்

 

71. கோவம் = தம்பலப் பூச்சி; அன்ன = போன்ற; கொங்கு = பூந்த்தாது; சேர்பு = ஒருசேர

 

72. வருமுலை = வளர்கின்ற முலை; அன்ன = போன்ற; வண்முகை = வளமான மொட்டுகள்;

உடைந்து = விரிந்து

 

73. திருமுகம் = அழகிய முகம்; அவிழ்ந்த = மலர்ந்த

 

74. ஆசு = குற்றம்; அங்கை = உள்ளங்கை; தோய்த்தல் = நனைத்தல்

 

75. சேயிதழ் = சிவந்த இதழ்; பொதிந்த = நிறைந்த; செம்பொன் = சிவந்த பொன்

 

76. ஏமம் =இன்பம்; இன்துணை = இனிய துணை; தழீஇ =தழுவி; உளர்ந்து = அசைத்து

 

77. காமரு = விருப்பம்; தும்பி = வண்டு; காமரம் = ஒரு பண்; செப்பும் = சொல்லும் (பாடும்)

 

78. தண்பனை = மருத நிலம்; தழீஇய = தழுவிய (சூழ்ந்த); தளரா = தளராத (சோர்வில்லாத); இருக்கை = ஊர்

 

79. குணபுலம் = கிழக்கே உள்ள நிலம்; மருமான் = வழித்தோன்றல்; ஒன்னார் = பகைவர்

 

80. ஓங்கு = உயர்ந்த; எயில் = மதில்; கதவம் = கதவு; உருமு = இடி; சுவல் = கழுத்து; சொறியும் = தேய்க்கும்

 

81. தூங்கு = தொங்கும்; எயில் = கோட்டை; எறிந்த =அழித்த; தொடி = கைவளை; தடக்கை = பெரிய கை

 

82. நாடா = தேடாத; நல்லிசை = நல்ல புகழ்; நற்றேர் = நல்ல தேர், நல்ல தேர்ப்படை; செம்பியன் = சோழன்

 

83. பூட்கை = வலிமை; உறந்தை = உறந்தை நகரம்; வறிதே =குறைவானதே; அதாஅன்று = அது மட்டுமன்று

 

பதவுரை:

68. நறுநீர் பொய்கை அடைகரை நிவந்த = நறுமணமுள்ள பொய்கையின் அடைத்த கரையில் நின்று வளர்ந்த

 

69. துறுநீர் கடம்பின் துணை ஆர் கோதை = செறிந்த தன்மையையுடைய கடம்ப மரத்தின் கொத்துக் கொத்தாக மாலைபோலப் பூத்திருக்கின்ற பூக்கள்

 

70. ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் = ஓவியம் போன்ற நீர் உண்ணும் துறையின் பக்கத்தில்

                                               

71.கோவத்து அன்ன கொங்குசேர்பு உறைத்தலின் = (சிவப்புச் சாயமாகப் பயன்படுத்தும்) தம்பலப்பூச்சியை ஒத்த தாதுக்கள் சேர்ந்து உதிர்தலால்,

 

72. வருமுலை அன்ன வண்முகை உடைந்து = வளர்கின்ற முலையை ஒத்த வளமான மொட்டு நெகிழ்ந்து

 

73. திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை = அழகிய முகம் போல மலர்ந்த தெய்வத் தன்மையுடைய தாமரையிடத்து

 

74. ஆசுஇல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன = குற்றமற்ற உள்ளங்கையில் அரக்கு (சாதிலிங்கம்) தோய்ந்ததைப் போன்ற

 

75. சேயிதழ் பொதிந்த செம்பொன் கொட்டை = சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்னால் செய்ததைப் போன்ற தாமரையின் நடுவிடத்தின்மேல்

               

76. ஏம இன்துணை தழீஇ இறகு உளர்ந்து = தன்னுடைய இனிய துணையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு,

 

77. காமரு தும்பி காமரம் செப்பும் = விருப்பமுடைய வண்டுகள் சீகாமரம் என்னும் பண்ணை இசைக்கும்

 

78. தண்பணை தழீஇய தளரா இருக்கை = மருத நிலம் சூழ்ந்த சோர்வில்லாத குடியிருப்பினையுடைய

 

79. குணபுலம் காவலர் மருமான் ஒன்னார் = கிழக்குத் திசையில் உள்ள நாட்டைக் காக்கும் குடியில் தோன்றியவன், பகைவரின்

 

80. ஓங்குஎயில் கதவம் உருமுச்வல் சொறியும் = உயர்ந்த மதிலின் கதவில் இடியுடன் கூடிய மேகம் தினவால் தன் கழுத்தைத் தேய்க்கும்  

 

81. தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை =வானத்தே தொங்கும் கோட்டையை அழித்த[3], ஓளிபொருந்திய வீரவளை விளங்கும் பெருமையையுடைய கையினையும்

 

82. நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன் = தான் விரும்பித் தேடாத நல்ல புகழினையும், நல்ல தேரினையும் உடைய சோழன் – அவனது

 

83. ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று = (தன் குடிகள் தன்னைவிட்டு) அகலோம் என மேற்கொண்ட உறுதியையும் உடைய உறந்தையும் சிறிதே; அதுவன்றியும்,

 

கருத்துரை:

சோழநாட்டில் உள்ள நறுமணம் மிக்க பொய்கையின் கரையில் நின்று வளர்ந்த செறிந்த தன்மையையுடைய கடம்ப மரங்களில் கொத்துக்கொத்தாக மாலைபோலப் பூக்கள் பூத்திருக்கும். அந்தப் பூக்களிலிருந்து தம்பலப் பூச்சிகளைப் போன்ற தாதுக்கள் நீர் உண்ணும் துறையின் பக்கத்தில் உதிர்ந்து பரந்திருத்தலால், அந்தத் துறையின் கரை ஓவியம்போல் அழகுபெற்று விளங்கும். அந்தத் துறையில், வளர்கின்ற முலையை ஒத்த வளமான மொட்டுகள் நெகிழ்ந்து அழகிய முகம் போல மலர்ந்து தெய்வத் தன்மையுடைய தாமரையாகக் காட்சி அளிக்கும். பெண்களின் மாசற்ற உள்ளங்கையில் சிவந்த நிறம் பொருந்தி இருப்பது போன்று, சிவந்த இதழ்கள் நிறைந்த அந்தத் தாமரை மலர்களின் நடுவில், தம்முடைய இனிய துணைகளைத் தழுவி, சிறகுகளை அசைத்து வண்டுகள் சீகாமரம் என்ற பண்ணை இசைக்கும்.  சோழ மன்னன் அத்தகைய மருத நிலம் சூழ்ந்த, சோர்வில்லாத குடியிருப்பினையுடைய கிழக்குத் திசையில் உள்ள நாட்டைக் காக்கும் குடியில் தோன்றியவன்; வானத்தே தொங்கும் கோட்டை மதிற்கதவில் இடியுடன் கூடிய மேகம் தினவால் தன் கழுத்தைத் தேய்க்கும் கோட்டையை அழித்தவனின் வழித்தோன்றல்; ஓளிபொருந்திய வீரவளை விளங்கும் பெருமையுடைய கையினையும் தான் விரும்பித் தேடாத நல்ல புகழினையும், நல்ல தேரினையும் உடையவன். குடிமக்கள் தம் நாட்டைவிட்டு விலகாத சோழ நாட்டின் உறந்தையில் கிடைக்கும் பரிசும் சிறிதே. அது மட்டுமன்று.

சிறப்புக் குறிப்பு:

 

 

கடையெழு வள்ளல்களின் சிறப்பு

பேகன்

 

வானம் வாய்த்த வளம் மலை கவாஅன்

கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய                                         85

 

அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

பெரும் கல் நாடன் பேகனும்

 

அருஞ்சொற்பொருள்:

84. வானம் = மழை; வாய்த்தல் = நன்கமைதல்; கவாஅன் = மலையின் அடிவாரம்

 

85. கானம் = காடு; மஞ்ஞை = மயில்; கலிங்கம் = ஆடை; நல்குதல் = அளித்தல் (கொடுத்தல்)

 

86. திறல் = வலிமை; அணங்கு = அழகு; ஆவியர் = ஆவியர் குடி

 

87. பெருங்கல் நாடு = பெரிய மலை நாடு

 

பதவுரை:

84. வானம் வாய்த்த வளம் மலை கவாஅன் = தவறாமல் மழை பெய்யும் மலையின் அடிவாரத்தில்

 

85. கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய = உள்ள காட்டில் வாழும் மயிலுக்கு ஆடை அளித்த

                               

86. அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் = அரிய ஆற்றலும் அழகுமுள்ள ஆவியர் குடியிற் பிறந்த பெருமனும்

                                                                                                                

87. பெரும் கல் நாடன் பேகனும் = பெரிய மலை நாட்டையுடைய பேகனும்

 

கருத்துரை:

தவறாமல் மழை பெய்யும் மலையின் அடிவாரத்தில் உள்ள காட்டில் வாழும் மயிலுக்கு ஆடை அளித்த, அரிய ஆற்றலும் அழகுமுள்ள ஆவியர் குடியிற் பிறந்தவனும் பெரிய மலை நாட்டுக்குத் தலைவனுமாகிய பேகனும்

 

 

பாரி

. . . . . . . . . . . . . . . . . .  சுரும்பு உண

நறு வீ உறைக்கும் நாக நெடு வழி

சிறு வீ முல்லைக்கு பெரும் தேர் நல்கிய

பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்                          90

பறம்பின் கோமான் பாரியும்

 

அருஞ்சொற்பொருள்:

87. சுரும்பு = வண்டு; உண = உண்ண

 

88. நறு = நறுமணமுள்ள; வீ = மலர்; நாகம் = புன்னை மரம்; உறைக்கும் = உதிர்க்கும்; நெடுவழி = நீண்ட வழி

 

89: வீ = மலர்; நல்கிய = அளித்த

 

90. பிறங்கல் = ஒலித்தல்                         

 

91. பறம்பு = பறம்பு மலை; கோமான் = தலைவன்

 

பதவுரை:

87. சுரும்பு உண = வண்டுகள் தேனை உண்ணுமாறு

 

88. நறு வீ உறைக்கும் நாக நெடு வழி = நறுமணமுள்ள மலர்களை உதிர்க்கும் புன்னை மரங்கள் உள்ள நெடிய வழியில்

 

89. சிறு வீ முல்லைக்கு பெரும் தேர் நல்கிய = சிறிய பூக்களைப் பூக்கும் முல்லைக் கொடிக்குத் தன்னுடைய பெரிய தேரை அளித்த

 

90. பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்  = ஒலிக்கின்ற அருவி விழும் மலைச் சாரலில் உள்ள     

               

91.  பறம்பின் கோமான் பாரியும் = பறம்பு மலைக்கு மன்னனாகிய பாரியும்

 

கருத்துரை:

வண்டுகள் தேனை உண்ணுமாறு நறுமணமுள்ள மலர்களை உதிர்க்கும் புன்னை மரங்கள் உள்ள நெடிய வழியில், சிறிய பூக்களைப் பூக்கும் முல்லைக் கொடிக்குத் தன்னுடைய பெரிய தேரை அளித்தவனும், ஒலிக்கின்ற வெண்மையான அருவி மலைச்சாரலிலிருந்து விழும் பறம்பு மலைக்கு மன்னனாகிய பாரியும்

காரி

 

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .கறங்குமணி

வால்உளை புரவியொடு வையகம் மருள

ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த

அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்

கழல்தொடித் தடக்கை காரியும்                                                 95

 

அருஞ்சொற்பொருள்:

91. கறங்குதல் = ஒலித்தல்

 

92. வால் = வெண்மை; உளை = தலையாட்டம் என்னும் குதிரை அணிகலன்; புரவி = குதிரை; வையகம் = உலகம்; மருள = வியக்க

 

93. ஈரம் = அன்பு; ஈந்த = வழங்கிய        

 

94. அழல் = சினத்தீ; அஞ்சுவரு = பகைவருக்கு அச்சத்தை வரச் செய்யும்

 

95. கழல் = காலில் அணியும் வீரக்கழல்; தொடி = கையில் அணியும் வளை; தடக்கை = பெருமை மிக்க கை

 

பதவுரை:

91.  கறங்குமணி = ஒலிக்கும் மணி

92.  வால் உளை புரவியொடு வையகம் மருள = வெண்மையான தலையாட்டத்தை உடைய குதிரையும் பலரும் வியக்குமாறு

93. ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த = அன்போடு கூடிய நல்ல மொழியும் இரவலர்க்குக் கொடுத்தருளியவனும்

 

94. அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் = பகைவர்க்கு அச்சம் தரும் நெடிய வேலினையும்

 

95. கழல்தொடித் தடக்கை காரியும் = உழல்கின்ற கைவளையும், பெருமை மிக்க கையினையும் உடைய காரியும்

 

கருத்துரை:

ஒலிக்கும் மணியும், வெண்மையான தலையாட்டத்தை உடைய குதிரையும், பலரும் வியக்குமாறு அன்போடு கூடிய நல்ல மொழியும் இரவலர்க்குக் கொடுத்தருளியவனும், பகைவர்க்கு அச்சம் தரும் நெடிய வேலினையும், உழல்கின்ற கைவளையையும், பெருமை மிக்க கையினையும் உடைய காரியும்

 

ஆய்

 

. . . . . . . . . . . . . . . . . . . . .நிழல் திகழ்                             95

 

நீல நாகம் நல்கிய கலிங்கம்

ஆல்அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த

சாவம் தாங்கிய சாந்து புலர் திணிதோள்

ஆர்வ நன்மொழி ஆயும் . . . .

 

அருஞ்சொற்பொருள்:

95. நிழல் = ஒளி; திகழ்தல் = விளங்குதல்

 

96. நீல நாகம் = நீலமணியையுடைய பாம்பு; நல்கிய = அளித்த; கலிங்கம் = ஆடை

 

97. ஆல் அமர் செல்வன் = ஆலமரத்தின் கீழ் அமர்ந்த இறைவன் (சிவன்)

 

98. சாவம் = வில்; சாந்து = சந்தனம்; திணிதோள் = திண்மையான தோள்

 

99. ஆர்வம் = அன்பு; நன்மொழி = நல்ல மொழி

 

பதவுரை:

95. நிழல் திகழ் = ஒளி வீசும்

 

96. நீல நாகம் நல்கிய கலிங்கம் = நீலமணியைத் தன்னிடத்தே கொண்ட பாம்பு தனக்குக் கொடுத்த ஆடையை

 

97. ஆல்அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த = ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள இறைவனுக்கு கொடுத்த

 

98. சாவம் தாங்கிய சாந்து புலர் திணிதோள் = வில்லைத் தாங்கிய சந்தனம் பூசி உலர்ந்த திண்மையான தோளையும்

 

99. ஆர்வ நன்மொழி ஆயும் = அன்பான நல்ல மொழி பேசியவனுமாகிய ஆயும்

 

கருத்துரை:

ஒளி வீசும் நீலமணியைத் தன்னிடத்தே கொண்ட பாம்பு தனக்குக் கொடுத்த ஆடையை

ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள இறைவனுக்குக் கொடுத்தவனும், வில்லைத் தாங்கிய, சந்தனம் பூசி உலர்ந்த திண்மையான தோளினையும், அன்பான நல்ல மொழி பேசியவனுமாகிய ஆயும்

 

அதிகன்

 

 

. . . . . . . . . . . . . . . . . .. மால்வரைக்

கமழ் பூ சாரல் கவினிய நெல்லி                                                 100

 

அமிழ்துவிளை தீம்கனி ஔவைக்கு ஈந்த

உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்

அரவக்கடல் தானை அதிகனும்

அருஞ்சொற்பொருள்:

99. மால் = பெருமை; வரை = மலை

 

100. கமழும் = மணம் வீசும்; சாரல் = மலைச்சாரல்; கவினிய = அழகிய

 

101. அமிழ்து விளை = அமிழ்தத்தன்மையைத் தன்னிடத்தே கொண்ட; ஈந்த = கொடுத்த

 

102. உரவு = மிகுதி; கனலும் = எரியும்               

 

103. அரவம் = ஆரவாரம்; தானை = படை

 

பதவுரை:

99. மால்வரை = பெருமையுடைய மலையில்

 

100. கமழ் பூ சாரல் கவினிய நெல்லி = கமழும் பூக்களையுடைய மலைசாரலில் அழகிய நெல்லி மரத்தில்

 

101. அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த = அமிழ்தின் தன்மைகொண்டு விளைந்த இனிய பழத்தை ஔவைக்குக் கொடுத்தவனும்,

 

102. உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் = மிகுதியான சினம் நின்றெரியும், ஒளியால் விளங்கும் நெடிய வேலினையும்

 

103.  கடல் தானை அதிகனும் = ஆரவாரமுள்ள கடல் போன்ற படையினையும் உடையவனும் ஆகிய அதிகமானும்

 

 

கருத்துரை:

பெருமையுடைய மலையில் கமழும் பூக்களையுடைய மலைசாரலில் அழகிய நெல்லி மரத்தில்

அமிழ்தின் தன்மைகொண்டு விளைந்த இனிய பழத்தை ஔவைக்குக் கொடுத்தவனும், மிகுதியான சினம் நின்றெரியும் ஒளியோடு விளங்கும் நெடிய வேலினையும் ஆரவாரமுள்ள கடல் போன்ற படையினையும் உடையவனுமாகிய அதிகமானும்

 

 

 

நள்ளி

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . கரவாது

நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை                     105

 

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு

நளிமலை நாடன் நள்ளியும்

 

 

அருஞ்சொற்பொருள்:

103. கரவாது = மறைக்காமல்

 

104. நட்டோர் = நட்புக்கொண்டோர்; உவப்ப = மகிழ; நடைப்பரிகாரம் = வாழ்க்கை நடத்துவதற்கான உதவிகள்

 

105. முட்டாது = குறையாது; முனை = போர்முனை; தடக்கை = பெருமையுடைய கை

 

106. துளிமழை = துளியையுடைய மழை (மழைத்துளி); வளி = காற்று; துஞ்சும் = தங்கும்.

கோடு =மலைச்சிகரம்; நெடுங்கோடு = நெடிய மலைச்சிகரம்

 

107. நளி = செறிந்த; நாடன் = நாட்டுக்குத் தலைவன்

 

பதவுரை:

103. கரவாது = மறைக்காமல்,

 

104. நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் = நட்புச் செய்தோர் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான பொருளை

 

105. முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கை =     குறையாது கொடுத்தவனும்,

போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கையினையும், 

                               

106. துளிமழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு = சொட்டும் மழை பெய்யும் காற்றுத் தங்கும் நெடிய சிகரங்களையுடைய

 

107.  நாடன் நள்ளியும் = செறிந்த மலைநாட்டையுமுடைய நள்ளியும்

 

கருத்துரை:               

மறையாமல், நட்புச் செய்தோர் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான பொருளைக் குறையாது கொடுத்தவனும், போர்த்தொழிலால் விளங்கும் பெருமையுடைய கையினையும்          சொட்டும் மழை பெய்யும் காற்றுத் தங்கும் நெடிய சிகரங்களையுடைய செறிந்த மலைநாட்டையுடையவனுமாகிய நள்ளியும்

 

ஓரி

 

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . நளிசினை

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து

குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த

காரிக் குதிரை காரியொடு மலைந்த                                                                          110

 

ஓரிக் குதிரை ஓரியும்

 

107. நளி = நெருக்கம்; சினை = கிளை

 

108. நறும் = நறுமணம் வீசும்; போது = மலர்; கஞலிய = நெருங்கிய; நாகு = இளமை; முதிர் = முதிர்ந்த; நாகம் = சுரபுன்னை

 

109. பொறை = மலை; கோடியர் = கூத்தர்; ஈந்த = கொடுத்த

 

110. காரிக்குதிரை = காரி என்னும் குதிரை; காரியொடு = காரி என்ற குறுநில மன்னனோடு; மலைந்த = போரிட்ட

 

111. ஓரி = ஓரி என்னும் குதிரை; ஓரியும் = ஓரி என்பவனும்

 

பதவுரை:

107. நளி சினை = நெருக்கமான கிளைகளில்

 

108. நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து = நறுமணமுள்ள பூக்கள் நெருக்கமாக அமைந்த இளமை முதிர்ந்த சுரபுன்னையையும்,

 

109. குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த = சிறிய குன்றுகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்குக் கொடுத்தவனும்,

 

110. காரிக் குதிரை காரியொடு மலைந்த = காரியென்னும் குதிரையையுடைய காரியோடு போர்செய்தவனும்

                                               

111. ஓரி குதிரை ஓரியும் = ஓரியென்னும் குதிரையையுடைய ஓரியும்

 

கருத்துரை:

நெருக்கமான கிளைகளில் நறுமணமுள்ள பூக்கள் நெருக்கமாக அமைந்த இளமை முதிர்ந்த சுரபுன்னையையும் சிறிய குன்றுகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்குக் கொடுத்தவனும், காரி என்னும் குதிரையையுடைய காரியோடு போர்செய்தவனுமாகிய ஓரி என்னும் குதிரையையுடைய ஓரியும்

 

நல்லியக்கோடனின் ஈகைச் சிறப்பு

 

 

.  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என ஆங்கு

எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்

எழுவர் பூண்ட ஈகை செந்நுகம்

விரிகடல் வேலி வியலகம் விளங்க

ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்                               115

 

நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்

துறைஆடு மகளிர்க்கு தோட்புணை ஆகிய

பொருபுனல் தரூஉம் போக்கறு மரபின்

தொல்மா இலங்கை கருவொடு பெயரிய

நன்மா இலங்கை மன்னருள்ளும்                                              120

 

மறுஇன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்

உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்

களிற்றுத் தழும்புஇருந்த கழல் தயங்கு திருந்துஅடி

பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை

பல்இயக் கோடியர் புரவலன் பேர்இசை                                125

 

நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு

தாங்கரு மரபின் தன்னும் தந்தை

வான்பொரு நெடுவரை வளனும் பாடி

முன்நாள் சென்றனம் ஆக

 

 

அருஞ்சொற்பொருள்:

111. என = என்று; ஆங்கு = அக்காலத்து

 

112. சமம்= போர்; எழுசமம் = எழுகின்ற போர்கள்; கடந்த = அழித்த, வென்ற; எழு = கணைய மரம்; உறழ் = போன்ற; திணிதோள் = திண்மையான தோள்

 

113. எழுவர் = ஏழு வள்ளல்கள்; பூண்ட = மேற்கொண்ட; நுகம் = பாரம்; செந்நுகம் = செம்மையான பாரம்

 

114. வியலகம் = அகன்ற உலகம்

 

115. தாங்கிய = பொறுத்த; உரன் = வலிமை; நோன் = வலிமையான; தாள் = கால்

 

116. நறு = மணமுள்ள; வீ = மலர்; நாகம் = சுரபுன்னை; அகில் = அகில் மரம்; ஆரம் = சந்தன மரம்

 

117. துறை = நீர்த்துறை; புணை = தெப்பம்

 

118. பொருபுனல் = கரையைக் குத்துகின்ற நீர்; தரூம் = தரும்; போக்குதல் = அழித்தல்; போக்கறு = அழித்தற்கரிய

 

119. தொல் = தொன்மையான; மா = பெருமை; கருவோடு = கருவில் தோன்றியபொழுதே;

பெயரிய = பெயரைப் பெற்ற

 

120. நல் = நல்ல; மா = பெருமை

 

121. மறு = குற்றம்; வடு = பழி; வாய்வாள் = குறி தப்பாத வாள்

 

122. உறு = மிக்க; துப்பு = வலிமை; ஓவியர் = ஓவியர் குடி; பெருமகன் =பெருமைக்கு உரியவன்

 

123. தயங்குதல் = அசைதல்; திருந்து = திருத்தமான

 

124. கணம் = கூட்டம்; சிதறும் = வாரி வழங்கும்; தடக்கை = பெருமைகுரிய கை;

 

125. இயம் = வாத்தியம்; கோடியர் =கூத்தர்; புரவலன் = பாதுகாப்பவன்; இசை = புகழ்

 

126. நயந்த = விரும்பியதை

 

127. தாங்கரு = பொறுத்தற்கரிய

 

128. வான்பொரு = விண்ணைத்தொடும்; நெடுவரை = நெடிய மலை; வளன் = வளம்;

 

129. முன்நாள் = சில நாட்களுக்குமுன்

 

பதவுரை:

111. என ஆங்கு = என்று கூறப்பட்ட அக்காலத்தே,

 

112. எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள் = தம்மை நோக்கி வருகின்ற போர்களில் வெற்றிபெற்ற, கணைய மரத்தைப் போன்ற திண்மையான தோளையுடைய

 

113.  பூண்ட ஈகை செம் நுகம் = எழுவரும், மேற்கொண்ட ஈகையாகிய செவ்விய பாரத்தை,

 

114. விரிகடல் வேலி வியலகம் விளங்க = பரந்த கடலை வேலியாக உடைய அகன்ற உலகம் தழைக்க

 

115. ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள் = ஒருவனாகத் தானே பொறுத்த வலிமையான முயற்சியுடையவனும்               

 

116. நறுவீ நாகமும் அகிலும் ஆரமும் = நறுமணமுள்ள மலர்களையுடைய சுரபுன்னையும், அகிலும் சந்தனமும்

 

117. துறைஆடு மகளிர்க்கு தோட்புணை ஆகிய = நீராடும் துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி

 

118. பொருபுனல் தரூஉம் போக்கறு மரபின் = கரையை மோதுகின்ற நீர் கொண்டுவந்து தருகின்ற அழித்தற்கு அரிய மரபையுடைய

 

119. தொல்மா இலங்கை கருவொடு பெயரிய = பழைய, பெருமை மிக்க இலங்கையின் பெயரைத் தான் தோன்றிய காலத்திலேயே தனக்குப் பெயராகவுடைய

 

120. நன்மா இலங்கை மன்னருள்ளும் = நல்ல பெருமையையுடைய மாவிலங்கையை ஆண்ட மன்னர்கள் பலருள்ளும்

 

121. மறுஇன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள் = குற்றமின்றி விளங்கிய, பழி இல்லாத, குறி தப்பாத வாளினையுடைய

 

122. உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன் = புலியைப் போன்ற மிகுந்த வலிமையுடையவனும் ஓவியர் குடியில் தோன்றிய பெருமகனும்

 

123. களிற்றுத் தழும்புஇருந்த கழல் தயங்கு திருந்துஅடி = யானையைச் செலுத்துவதால் உண்டான தழும்பு இருந்த, வீரக்கழல் அசையும், திருத்தமான அடிகளையும்

 

124. பிடிகணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை = பெண்யானைகளை மழை போல வாரி வழங்கும் வள்ளன்மை பொருந்திய பெருமைக்குரிய கைகளை உடையவனும்

 

125. பல்இயக் கோடியர் புரவலன் பேர்இசை = பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய

 

126. நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு = நல்லியக்கோடனைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன்

 

127. தாங்கரு மரபின் தன்னும் தந்தை = பிறரால் பொறுத்தற்கரிய மரபையுடைய அவனைப் பற்றியும், அவன் தந்தையைப் பற்றியும்

 

128. வான்பொரு நெடுவரை வளனும் பாடி = அவனுடைய வானத்தைத் தொடும் நெடிய மலையின் வளத்தைப் பற்றியும் பாடி

 

129. முன் நாள் சென்றனம் ஆக = சில நாட்களுக்கு முன்னே நாங்கள் அங்குச் சென்றோமாக

 

கருத்துரை:

என்று கூறப்பட்ட அக்காலத்தே, தம்மை நோக்கி வருகின்ற போர்களில் வெற்றி பெற்ற கடையெழு வள்ளல்கள் கணைய மரத்தைப் போன்ற திண்மையான தோளையுடையவர்கள். நல்லியக்கோடன் என்ற மன்னன், அந்தக் கடையெழு வள்ளல்கள் எழுவரும் மேற்கொண்ட ஈகையாகிய செவ்விய பாரத்தை, பரந்த கடலை வேலியாக உடைய அகன்ற உலகம் தழைக்க, ஒருவனாகத் தானே பொறுத்த வலிமையான முயற்சியுடையவன். நறுமணமுள்ள மலர்களையுடைய சுரபுன்னையும் அகிலும் சந்தனமும் நீராடும் துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி கரையை மோதுகின்ற நீர் கொண்டுவந்து தருகின்ற, அழித்தற்கு அரிய மரபையுடைய பழைய பெருமை மிக்க இலங்கையின் பெயரைத் தான் தோன்றிய காலத்திலேயே தனக்குப் பெயராகவுடைய நல்ல பெருமையையுடைய மாவிங்கையை ஆண்ட மன்னர்கள் பலருள்ளும், குற்றமின்றி விளங்கிய, பழி இல்லாத, குறி தப்பாத வாளினையுடையவன் நல்லியக்கோடன்.  அவன் வலிமையில் புலியைப் போன்றவன்; ஓவியர் குடியில் தோன்றிய பெருமகன்; யானையைச் செலுத்துவதால் உண்டான தழும்பு இருந்த, வீரக்கழல் அசையும், திருத்தமான அடிகளையுடையவன்; பெண்யானைகளை மழை போல வாரி வழங்கும் வள்ளன்மை பொருந்திய பெருமைக்குரிய கைகளையுடையவன். பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தர்களின் புரவலன்; அத்தகைய பெரிய புகழையுடைய நல்லியக்கோடனைக் கண்டு அவனிடமிருந்து பரிசு பெற விரும்பி, பிறரால் பொறுத்தற்கரிய மரபையுடைய அவனைப் பற்றியும், அவன் தந்தையைப் பற்றியும் அவனுடைய வானத்தைத் தொடும் நெடிய மலையின் வளத்தைப் பற்றியும் பாடிச் சில நாட்களுக்கு முன்னர் நாங்கள் அங்குச் சென்றோமாக,

 

 

 காணுமுன் இருந்த நிலை

 

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . இந்நாள்

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை                    130

கறவா பால்முலை கவர்தல் நோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்

 

அருஞ்சொற்பொருள்:

129. இந்நாள் = இந்த நாள்

 

130. திறவாக் கண்ண = திறக்காத கண்ணையுடைய; சாய் = சாய்ந்த; செவி = காது

 

131. கறவா = தாயின் மடியிலிருந்து பாலைப் பெறாத; பால்முலை = பால் சுரக்கும் முலை; 

கவர்தல் = நுகர்தல் (உண்ணுதல்) நோனாது = (தன் பசியைப்) பொறுக்க முடியாமல்

 

132. புனிறு = ஈன்றணிமை (அண்மையில் குட்டிகளைப் பெற்ற); புல்லென்னும் = புன்மையுடைய (வறுமையுடைய); அட்டில் = அடுக்களை

 

பதவுரை:              

129. இந்நாள் = இந்த நாள்

 

130. திறவாக் கண்ண சாய்செவிக் குருளை = திறவாத கண்களையும் சாய்ந்த செவிகளையும் உடைய நாய்க்குட்டி

 

131. கறவா பால்முலை கவர்தல் நோனாது = பால் உண்ண முடியாத முலைகளிலிருந்து குட்டி பால் உண்ணுவதைத் தன் பசியால் பொறுத்துக்கொள்ள முடியாத              

 

132. புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் = அண்மையில் குட்டியை ஈன்ற தாய் நாய் குரைக்கும் அடுக்களை

 

கருத்துரை:

இந்த நாளில், திறவாத கண்களையும் சாய்ந்த செவிகளையும் உடைய நாய்க்குட்டி தன் முலைகளிருந்து பால் உண்ணுவதைத் தன் பசியால் பொறுத்துக்கொள்ள முடியாத, அண்மையில் குட்டியை ஈன்ற தாய் நாய் குரைக்கும் அடுக்களை

 

நல்லியக்கோடனைக் காணுமுன் இருந்த வறுமை

 

காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த

பூழி பூத்த புழல் காளாம்பி

ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்                                135

 

வளைக்கை கிணைமகள் வள்உகிர்க் குறைத்த

குப்பை வேளை உப்பிலிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணி கடையடைத்து

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன்மிசையும்

அழிபசி வருத்தம் வீட                                                                   140

 

 

அருஞ்சொற்பொருள்:

133. காழ் = கூரையைத் தாங்கி நிற்கும் கழி; காழ்சோர் = கூரையைத் தாங்கி நிற்கும் கழிகள் இற்று; முதுசுவர் = பழைய சுவர்; கணம் = கூட்டம்; சிதல் = கறையான்

 

134. பூழி = புழுதி; காளாம்பி = காளான்

 

135. ஒல்குதல் = தளர்தல்; உழந்த = வருந்த; ஒடுங்குநுண் = ஒடுங்கி நுண்ணிய; மருங்குல் = இடை

 

136. வளைக்கை = வளையணிந்த கை; கிணைமகள் = கிணைப்பறை கொட்டும் பாணனின் மனைவி (விறலி); வள் = கூர்மை; உகிர் = நகம்; குறைத்த = பறித்த

 

137. உப்பிலி = உப்பில்லாத

 

138. மடவோர் = அறிவில்லாத பெண்கள்; காட்சி = கண்ணுறல்; கடை = வாயில்; கடையடைத்து = வாயிலை அடைத்து

 

139. இரு = பெரிய; இரும்பேர் = மிகப்பெரிய; ஒக்கல் = சுற்றம்; மிசைதல் = உண்ணுதல்

 

140. அழிபசி = அழிக்கும் பசி; வீடல் = நீங்குதல்

 

பதவுரை:

133. காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த = கூரையைத் தாங்கி நிற்கும் கழிகள் இற்றுப்போய், அக்குள்ள சுவர்களைக் கறையான்களின் கூட்டம் அரித்த

 

134. பூழி பூத்த புழல் காளாம்பி = புழுதியில் காளான்கள் பூத்தன

 

135. ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல் = தளர்வடையச் செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி மெல்லிய இடையும்,                                         

 

136. வளைக்கை கிணைமகள் வள்உகிர்க் குறைத்த = வளையல் அணிந்த கையுமுடைய விறலி (பாணனின் மனைவி) தன் கூர்மையான நகத்தால் கிள்ளிய

 

137. குப்பை வேளை உப்பிலிலி வெந்ததை = குப்பையில் விளைந்த கீரையை உப்பில்லாமல் வேகவைத்து,

 

138. மடவோர் காட்சி நாணி கடையடைத்து = அதைப் (புறங்கூறும்) பெண்கள் பார்த்தால் பழித்துப் பேசுவார்கள் என்பதற்காக வெட்கப்பட்டு வாயிலை அடைத்து

 

139. இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன்மிசையும் = மிகப்பெரிய சுற்றத்துடன் ஒன்றுகூடி உண்ணும்

 

140. அழிபசி வருத்தம் வீட = அழிக்கின்ற பசியால் தோன்றிய வருத்தம் நீங்குமாறு

 

கருத்துரை:

கூரையைத் தாங்கி நிற்கும் கழிகள் இற்றுப் போயின. அங்குள்ள சுவர்களைக் கறையான்களின் கூட்டம் அரித்ததால் தோன்றிய புழுதியில் காளான்கள் பூத்தன. சோர்வடையச் செய்யும் பசியால் வருந்தி, ஒடுங்கி மெல்லிய இடையும், வளையல் அணிந்த கையும் உடைய விறலி (பாணனின் மனைவி) தன் கூர்மையான நகத்தால் கிள்ளிய, குப்பையில் விளைந்த கீரையை உப்பில்லாமல் வேகவைத்துச் சமைத்தாள். அதை அவள் குடும்பத்தினர் உண்ணுவதைப் பிற (புறங்கூறும்) பெண்கள் பார்த்தால் பழித்துப் பேசுவார்கள் என்பதற்காக வெட்கப்பட்டு, வாயிலை அடைத்து, மிகப்பெரிய சுற்றத்துடன் ஒன்றுகூடி உண்ணும், உயிரை அழிக்கின்ற பசியால் தோன்றிய வருத்தம் நீங்குமாறு

 

 

நல்லியக்கோடனின் வள்ளன்மை

 

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .  பொழிகவுள்                                 140

 

தறுகண் பூட்கைத் தயங்குமணி மருங்கின்

சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி

யாம் அவண் நின்றும் வருதும்

 

 

அருஞ்சொற்பொருள்:

140. பொழிதல் =சொரிதல், ஒழுகுதல்; கவுள் = கன்னம்

 

141. தறுகண் = கொடுமை; பூட்கை = வலிமை; தயங்குதல் = அசைதல்; மருங்கு = பக்கம்

 

142. சிறுகண் = சிறிய கண்; எய்தி = பெற்று

 

143. யாம் நாங்கள்; அவண் = அவ்விடம்; அவண் நின்றும் = அவ்விடத்திலிருந்து; வருதும் = வருகின்றோம்

 

பதவுரை:

140. பொழிகவுள் = மதம் ஒழுகும் கன்னங்களும்

 

141. தறுகண் பூட்கைத் தயங்குமணி மருங்கின் = கொடுமையான வலிமையும். அசையும் மணிகளையுடைய இருபக்கங்களும்,

 

142. சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி = சிறிய கண்களையுமுடைய யானையோடு, பெரிய தேரையும் பெற்று

 

143. யாம் அவண் நின்றும் வருதும் = நாங்கள் நல்லியக்கோடனிடமிருந்து வருகின்றோம்.

 

கருத்துரை:

மதம் ஒழுகும் கன்னங்களும், கொடுமையான வலிமையும். அசையும் மணிகளையுடைய இருபக்கங்களும், சிறிய கண்களையுமுடைய யானையோடு, பெரிய தேரையும் பெற்று நாங்கள் நல்லியக்கோடனிடமிருந்து வருகின்றோம்.

 

பாணனின் ஆற்றுப் படுத்தும் பண்பு

 

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . நீயிரும்

இவண்நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல்

செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்                             145

 

அருஞ்சொற்பொருள்:

143. நீயிரும் = நீங்களும்

 

144. இவண் = இவ்விடம்; நயந்து = விரும்பி; இரு = பெரிய; பேர் = பெரிய;

இரும்பேர் = மிகப்பெரிய; ஒக்கல் = சுற்றம்

 

145. செம்மல் = உள்ள நிறைவு (மகிழ்ச்சியான உள்ளம்); செல்குவீர் ஆயின் = செல்வீர்களானால்

 

பதவுரை:

143. நீயிரும் = நீங்களும்

 

144. இவண்நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல் = உங்களை விரும்பி இருக்கும் மிகப்பெரிய சுற்றத்தாரோடு

 

145. செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்  = மகிழ்ச்சியான உள்ளத்தோடு செல்வீர்களானால்

 

கருத்துரை:

நீங்களும் உங்களை விரும்பி இருக்கும் மிகப்பெரிய சுற்றத்தாரோடு மகிழ்ச்சியான உள்ளத்தோடு செல்வீர்களானால்

 

எயிற்பட்டினத்துக்குச் செல்லும் வழியும்

பரதவரின் விருந்தோம்பலும்

 

அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்

தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்

கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்

நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்

கானல் வெண்மணல் கடல் உலாய் நிமிர்தர                          150

 

பாடல் சான்ற நெய்தல் நெடுவழி

மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய

பனிநீர் படுவின் பட்டினம் படரின்

ஓங்குநிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன

வீங்குதிரை கொணர்ந்த விரை மரவிறகின்                            155

 

கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள்

மதி ஏக்கறூஉம் மாசுஅறு திருமுகத்து

நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த

பழம்படு தேறல் பரதவர் மடுப்ப

கிளைமலர் படப்பை கிடங்கில் கோமான்                             160

 

தளைஅவிழ் தெரியல் தகையோன் பாடி

அறல்குழல் பாணி தூங்கியவரொடு

வறல்குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர்

 

அருஞ்சொற்பொருள்:

146. அலைநீர் = கடல்; பூப்பவும் = பூக்கவும்

                                                                                                       

147. தலைநாள் = முதல்நாள் (இளவேனிற்காலம் தொடங்குகின்ற நாள்); செருந்தி = செருந்தி மலர்; தமனியம் = பொன்; மருட்டுதல் = ஒத்திருத்தல்

 

148. கடுஞ்சூல் = முதற்சூல்; முண்டகம் = நீர்முள்ளி; கதிர்மணி = ஒளிவீசும் நீலமணி;

கழாஅல = கழல (பூக்க) 

 

149.  நெடுங்கால் = நெடிய தாள்; புன்னை = புன்னை மரம்; நித்திலம் = முத்து; வைப்பு = உண்டாக்கல் (அரும்புகள் தோன்றுதல்)

 

150. கானல் = கடற்கரை; உலாய் = சூழ்ந்து; நிமிர்தர = உயர்கின்ற (பரந்து ஏற);

 

151. சான்ற = அமைந்த; நெடுவழி = நீண்ட வழி

 

152 மணிநீர் = நீலமணியைப் போன்ற நீர்; வைப்பு = ஊர்; பெயரிய =பெயரைக் கொண்ட

 

153. படு = குளம்; பட்டினம் = கடற்கரையைச் சார்ந்த ஊர்

 

154. ஓங்குநிலை = உயர்ந்த தன்மை; மடிதல் = உறங்குதல்

 

155. வீங்குதல் = பருத்தல், பூரித்தல்; விரை = நறுமணம்

 

156. மாட்டி = கொளுத்தி

 

157. மதி = நிலவு; ஏக்கறூஉம் = ஏங்கும்

 

158, நுதி = கூர்மை; நுதிவேல் = கூர்மையான வேல்; நுளைமகள் = நெய்தல் நிலப்பெண்

 

159. படு – மிகுதிக் குறிப்பு; பழம்படு = மிகவும் பழைமையான; தேறல் = கள்ளின் தெளிவு; பரதவர் = நெய்த நில ஆடவர்; மடுத்தல் = உண்ணக் கொடுத்தல்

 

160. கிளைமலர் = கிளைகளில் உள்ள மலர்; படப்பை = பூந்தோட்டம்; கிடங்கில் = ஓர் ஊர்

 

161. தளைஅவிழ் = மோட்டு அவிழ்ந்த; தெரியல் = பூமாலை; தகையோன் = பெருமைக்குரியவன் (நல்லியக்கோடன்)

 

162. அறல் = தாள இறுதி; குழல் = ஒருவகை மீன்; பாணி = தாளம்

 

163. வறல் = உலர்ந்த; சூடு = சுடப்பட்டது; வயின் = இடம்; வயின்வயின் = எல்லா இடங்களிலும் (வீடுகள்தோறும்); பெறுகுவிர் = பெறுவீர்

 

பதவுரை:

146. அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும் = அலைகளைக்கொண்ட கடலின் கரையில் உள்ள தாழை அன்னப்பறவை போலப் பூக்கவும்,

 

147. தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் = இளவேனிற்காலத்தின் முதல் நாளில் செருந்தி மலர்கள் பொன்னைப்போல் பூத்துக் காண்பவர்களை மனத்தடுமாற்றம் அடையச் செய்யவும்

 

148. கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழா அலவும் = முதல் சூலையுடைய முள்ளிச் செடிகள் ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்,

 

149. நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும் = நெடிய தாளையுடைய புன்னை முத்துப் போல் அரும்புகளைப் பெற்றிருக்கவும்,

 

150. கானல் வெண்மணல் கடல் உலாய் நிமிர்தர = கடற்கரையின் வெண்மணற் பரப்பில் கடல் பரந்து ஏற,

 

151. பாடல் சான்ற நெய்தல் நெடுவழி = புலவர்கள் பாடுதற்கேற்ப அமைந்த நெய்தல் நிலத்தில் உள்ள நீண்ட வழியில்,

 

152. மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய = நீலமணி போன்ற நீர் சூழ்ந்த ஊர்களும் மதிலைத் தன் பெயரில் கொண்ட

 

153. பனிநீர் படுவின் பட்டினம் படரின் = குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைய, எயிற்பட்டினத்திற்குச் செல்வீராயின்

 

154. ஓங்குநிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன = உயரமான ஒட்டகம் படுத்து உறங்குவதுபோல்

 

155. வீங்குதிரை கொணர்ந்த விரை மர விறகின் = மிகுந்த அலைகள் கொண்டுவந்த நறுமணமுள்ள அகில் மரக்கட்டைகளில்

 

156. கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள் = கரிய புகையையுடைய சிவந்த தீயை மூட்டி, பெரிய தோளினையும்,

 

157. மதி ஏக்கறூஉம் மாசு அறு திருமுகத்து = திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அழகிய முகத்தில்

 

158. நுதி வேல் நோக்கின் நுளை மகள் அரித்த = கூர்மையான வேலைப் போன்ற கண்களையுடைய நெய்தல் நிலப்பெண் காய்ச்சி வடிகட்டிய

 

159. பழம்படு தேறல் பரதவர் மடுப்ப = பழைய கள்ளின் தெளிவை நெய்தல் நில ஆடவர் நீங்கள் உண்ணுவதற்குக் கொடுப்பர்,

 

160. கிளைமலர் படப்பை கிடங்கில் கோமான் = கிளைகளில் மலர்கள் மலர்ந்திருக்கும் பூந்தோட்டங்களையுடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு மன்னன்

 

161. தளைஅவிழ் தெரியல் தகையோர் பாடி = அரும்புகள் மலர்ந்த மாலையை அணிந்த பெருமைக்குரிய நல்லியக்கோடனை நீங்கள் பாடி

 

162. அறல் குழல் பாணி தூங்கியவரொடு = குழலோசையின் தாளத்திற்கேட்ப ஆடும் விறலியர் ஆட

 

163. வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர் =சூடான குழல்மீன் கறியை வீடுகள்தோறும் பெறுவீர்:

 

கருத்துரை:

அலைகளைக்கொண்ட கடலின் கரையில் உள்ள தாழை மரம் அன்னப்பறவை போலப் பூத்திருக்கும்.

இளவேனிற்காலத்தின் முதல் நாளில், செருந்தி மலர்கள் பொன்னைப்போல் பூத்துக் காண்பவர்களை மனத்தடுமாற்றம் அடையச் செய்யும்.  முதல் சூலையுடைய முள்ளிச் செடிகள் ஒளியுடைய நீலமணிபோலப் பூத்திருக்கும். நெடிய தாளையுடைய புன்னை முத்துப் போல் அரும்புகளைப் பெற்றிருக்கும்.  கடற்கரையின் வெண்மணற் பரப்பில்  கடல் பரந்து ஏற, புலவர்கள் பாடுதற்கேற்ப அமைந்த நெய்தல் நிலத்தில் உள்ள  நீண்ட வழியில், நீலமணி போன்ற கழிநீர் சூழ்ந்த ஊர்களும், மதிலைத் தன் பெயரில் கொண்ட,  குளிர்ந்த நீர் மிக்க குளங்களுமுடைய, எயிற்பட்டினத்திற்குச்  செல்வீராயின், உயரமான  ஒட்டகம் படுத்து உறங்குவதுபோல், மிகுந்த  அலைகள் கொண்டுவந்த நறுமணமுள்ள அகில் மரக்கட்டைகளில் கரிய புகையையுடைய சிவந்த தீயை மூட்டி, பெரிய தோளினையும், திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அழகிய முகத்தில் கூர்மையான வேலைப் போன்ற கண்களையுடைய நெய்தல் நிலப்பெண், காய்ச்சி வடிகட்டிய பழைய கள்ளின் தெளிவை நெய்தல் நில ஆடவர்  நீங்கள் உண்ணுவதற்குக் கொடுப்பர். கிளைகளில் மலர்கள் மலர்ந்திருக்கும் பூந்தோட்டங்களையுடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு மன்னன், அரும்புகள் மலர்ந்த மாலையை அணிந்த பெருமைக்குரிய நல்லியக்கோடனை நீங்கள் பாடி, குழலோசையின் தாளத்திற்கேற்ப ஆடும் விறலியர் ஆடினால், சூடான குழல்மீன் கறியை வீடுகள்தோறும் பெறுவீர்:

 

வேலூரில் விருந்து

 

பைந்நனை அவரை பவழம் கோப்பவும்

கருநனை காயா கணமயில் அவிழவும்                                    165

 

கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்

செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்

கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும்

முல்லை சான்ற முல்லைஅம் புறவின்

விடர்கால் அருவி வியன் மலைமூழ்கி                                     170

 

சுடர்கால் மாறிய செவ்வி நோக்கித்

திறல்வேல் நுதியின் பூத்த கேணி

விறல்வேல் வென்றி வேலூர் எய்தின்

உறுவெயிற்கு உலைஇய உருப்புஅவிர் குரம்பை

எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு                               175

 

தேமா மேனி சில்வளை ஆயமொடு

ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்

 

164. பை = பசுமை; நனை = மொட்டு; கோப்பு = கோத்தது

 

165. கரு = கருநிறம்; நனை =மொட்டு; காயா = காயாமலர்; கணம் = கூட்டம்; கணமயில் = மயில்களின் கூட்டம்; அவிழ = மலர

 

166. முசுண்டை = முசுண்டைக்கொடி; கொட்டம் = பனை ஓலையால் செய்த பெட்டி  

 

167. செழுங்குலை = செழுமையான குலை; காந்தள் = காந்தள் மலர்

 

168. கொல்லை = வீட்டின் பின்புறம்; நெடுவழி = நெடிய வழி; கோபம் = பட்டுப்பூச்சி; ஊரவும் = ஊர்ந்து செல்லவும்

 

169. சான்ற = அமைந்த; புறவு = முல்லை நிலம்

 

170. விடர் = மலைப்பிளவு; விடர்கால் = மலைப்பிளவில்; வியன் =பெரிய; மூழ்கி = மறைந்து

 

171. சுடர் = கதிரவன்; மாறிய = மறைகின்ற; செவ்வி =சமயம்          

 

172. திறல் = வலிமை; கேணி = நீர்நிலை

 

173. விறல் = பெருமை; வென்றி = வெற்றி; எய்தின் = அடைந்தால்

 

174. உறு = மிக்க; வெயிற்கு = வெயிலுக்கு; உலைவு = வருத்தம்; உருப்பு = வெப்பம்; அவிர் = ஒளி; குரம்பை = குடிசை

 

175. எயிற்றியர் = பாலை நிலமக்கள்; அட்ட = சமைத்த; இன்புளி = இனிய புளி; வெஞ்சோறு = சூடான சோறு

 

176. தேமா = இனிய மாமரம்; மேனி = உடல்; சில்வளை = சில வளையல்கள்; ஆயம் = பெண்களின் கூட்டம்

 

177. ஆமான் = காட்டுப்பசு; சூடு = சுடப்பட்டது; அமைவர = நிறைவாக; பெறுகுவிர் = பெறுவீர்

 

பதவுரை:

164. பைந்நனை அவரை பவழம் கோப்பவும் = பசுமையான அரும்புகளையுடைய அவரை பவளம் கோத்ததுபோல் பூக்கவும்

 

165. கருநனை காயா கணமயில் அவிழவும் =     கரிய அரும்புகளையுடைய காயா மலர்கள் கூட்டமாக இருக்கும் மயில்களின் கழுத்துகளைப் போல மலரவும்

               

166. கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் = செழுமையான முசுண்டைக்கொடியில் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டி போலப் பூக்கள் பூக்கவும்

 

167. செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும் = செழுமையான குலையினையுடைய காந்தள் மலர் கைவிரல் போலப் பூக்கவும்,

 

168. கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும் = கொல்லையிலுள்ள நெடிய வழியில் பட்டுப்பூச்சி ஊர்ந்து செல்லவும்

 

169. முல்லை சான்ற முல்லைஅம் புறவின் = முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லைக்கொடிகள் படர்ந்த காட்டில்,

 

170. விடர்கால் அருவி வியன் மலைமூழ்கி =     மலைப்பிளவுகளில் விழும் அருவிகளையுடைய பெரிய மலையில் ஞாயிறு மூழ்கியதால்                                   

 

171. சுடர்கால் மாறிய செவ்வி நோக்கித் = ஞாயிற்றின் சுடர்கள் மறைகின்ற மாலைக்காலத்தில் வானத்தைப் பார்த்து

 

172.  நுதியின் பூத்த கேணி = வேலின் நுனி போல மலரும் பூக்களையுடைய நீர்நிலைகளையுடைய

 

173.விறல்வேல் வென்றி வேலூர்[4] எய்தின் = வலிமை மிக்க வேலால் வெற்றி பெற்ற வேலூரை அடைந்தால்

 

174.உறுவெயிற்கு உலைஇய உருப்புஅவிர் குரம்பை = மிக்க வெயில் வருத்துவதால், ஒளிரும் வெப்பத்திற்காகக் குடிசையின் உள்ளேயே இருக்கின்ற

 

175. எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு = எயிற்றியர் (பாலைநில மகளிர்) இனிய புளியிட்டுச் சமைத்த சூடான சோற்றை,

                                                               

176. தேமா மேனி சில்வளை ஆயமொடு = இனிய மாமரத்தின் தளிர் போன்ற மேனியையுடைய, சில வளையல்களை அணிந்த, உங்கள் மகளிரின் கூட்டமும் நீங்களும்

 

177. ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் = காட்டுப்பசுவின் சூடான இறைச்சியோடு மனநிறைவடையப் பெறுவீர்

 

கருத்துரை:

பசுமையான அரும்புகளையுடைய அவரை பவளம் கோத்ததுபோல் பூத்திருக்கும். கரிய அரும்புகளையுடைய காயா மலர்கள் கூட்டமாக இருக்கும் மயில்களின் கழுத்துகளைப் போல மலர்ந்திருக்கும். செழுமையான முசுண்டைக்கொடியில் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டி போலப் பூக்கள் பூத்திருக்கும்.  செழுமையான காந்தள் மலர்க்குலைகள் கைவிரல்கள் போலப் பூத்திருக்கும். கொல்லையிலுள்ள நெடிய வழியில் பட்டுப்பூச்சி ஊர்ந்து செல்லும். முல்லைக்கொடிகள் படர்ந்த  காட்டில், மலைப்பிளவுகளில் விழும் அருவிகளையுடைய  பெரிய மலையில் ஞாயிறு மூழ்கியதால் ஞாயிற்றின் சுடர்கள் மறைகின்ற மாலைக்காலத்தில் வானத்தைப் பார்த்து, வேலின் நுனி போல மலரும் பூக்களையுடைய நீர்நிலைகளையுடைய, வலிமை மிக்க வேலால் வெற்றி பெற்ற வேலூரை நீங்கள் அடைந்தால், மிக்க வெயில் வருத்துவதால், ஒளிரும் வெப்பத்திற்காகக் குடிசையின் உள்ளேயே இருக்கின்ற எயிற்றியர் குலப்பெண்கள் (பாலைநில மகளிர்)  இனிய புளியிட்டுச் சமைத்த சூடான சோற்றை, இனிய மாமரத்தின் தளிர் போன்ற மேனியையுடைய, சில வளையல்களை அணிந்த, உங்கள் மகளிரின் கூட்டமும் நீங்களும் காட்டுப்பசுவின் சூடான இறைச்சியோடு மனநிறைவடையப் பெறுவீர்.

 

 

 

ஆமூர் வளமும் உழத்தியரின் விருந்தோம்பலும்

 

நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்

குறுங்கால் காஞ்சி கொம்பர் ஏறி

நிலைஅரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து                      180

 

புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்

வள்உகிர் கிழித்த வடுஆழ் பாசடை

முள்அரைத் தாமரை முகிழ்விரி நாட்போது

கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்

மதிசேர் அரவின் மானத் தோன்றும்                                         185

 

மருதம் சான்ற மருதத் தண்பணை

அந்தணர் அருகா அருங்கடி வியன்நகர்

அம்தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின்

வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின்

உரன்கெழு நோன்பகட்டு உழவர் தங்கை                              190

 

பிடிக்கை அன்ன பின்னுவீழ் சிறுபுறத்து

தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப

இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த

அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு

கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்              195

 

அருஞ்சொற்பொருள்:

178. நறு = மணமுள்ள; கோதை = மாலை; நாட்சினை = நாள் + சினை = அன்றலர்ந்த மலர்களையுடைய கிளை

 

179. குறுங்கால் = குறுகிய அடிமரம்; காஞ்சி = காஞ்சி மரம்; கொம்பர் = கொம்பு

 

180. நிலைஅரும் = முதுவேனிற்காலத்திலும் நீர் நிலைபெற்ற அருமையான; குட்டம் = குளம்

 

181. புலவு = புலால் நாற்றம்; கயல் = கயல் மீன்; பொன்வாய் = பொன்நிறமான வாய்; மணிச்சிரல் = மீன்கொத்திப்பறவை

 

182. வள் = கூர்மை; உகிர் = நகம்; வடுஆழ் = வடு பதிந்துள்ள; பாசடை = பசுமையான இலை

 

183. அரை = தண்டு; முள்அரை = முள்ளையுடைய தண்டு; முகிழ் = அரும்பு; விரி = விரிகின்ற, நாள் = அதிகாலை; போது = பொழுது, மலர்

 

184. கொங்கு = தேன்; கவர்தல் = நுகர்தல்; செங்கண் = சிவந்த கண்; சேவல் = ஆண்வண்டு

 

185. மதி = திங்கள்; சேர் = சேர்கின்ற; அரவம் = பாம்பு; மான = போல

 

186. சான்ற = அமைந்த; தண்பணை = மருத நிலம்

 

187. அருகா = குறையாத (நீங்காத); கடி = காவல்; அருங்கடி = அரிய காவல்

 

188. அம்தண் = அம்+தண் = அழகிய குளிர்ந்த; கிடங்கு = அகழி;

எய்தின் = அடைந்தால்

 

189. வலம் =வெற்றி; வலம்பட = வெற்றியைத் தருவதற்கு; வலிபுணர் = வலிமைபொருந்திய; எருத்து = கழுத்து

 

190. உரன் = ஊக்கம், வலிமை; கெழு = பொருந்திய; நோன் =வலிய; பகடு = எருது

 

191. பிடி = பெண்யானை; கை = துதிக்கை; பிடிக்கை = பெண்யானையின் துதிக்கை;

அன்ன = போன்ற; பின்னுவீழ் = பின்னல் தொங்குகின்ற; சிறுபுறம் =முதுகு

 

192. தொடி = வளையல்; மகடூ = பெண்; மகமுறை= மக்களைக்கொண்டு முறையாக;

தடுப்ப = தடுத்து

 

193. இரு = கரிய; காழ் = காம்பு; இரும்புமுகம் = உலக்கையின் இரும்பாலான பூண்

 

194. அவைப்பு = குற்றுதல்; மாண் = மாட்சிமை; அமலை = திரளை (கட்டி)

 

195. கவை = பிளப்பு; கவைத்தாள் = பிளவுபட்ட கால்; அலவன்= நண்டு; கலவை = கலந்து; பெறுகுவிர் = பெறுவீர்

 

பதவுரை:

178. கோதை தொடுத்த நாட்சினை = அன்றலர்ந்த நறுமணமுள்ள மலர்களை மாலையாகத் தொடுத்ததைப் போல காட்சி அளிக்கும் கிளைகளும்

 

179. குறுங்கால் காஞ்சி கொம்பர் ஏறி = குறுகிய அடிமரமும்கொண்ட காஞ்சி மரத்தின் கிளைகளில் ஏறி,

 

180. நிலைஅரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து =       வறண்ட காலத்திலும் நீர் வற்றாத அரிய குளத்தில் நீண்ட நேரம் காத்திருந்து

 

181. புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல் = புலால் நாற்றம் வீசும் கயல்மீன்களை மூழ்கி எடுத்த பொன்னிறமான வாயையுடைய நீலமணி போன்ற மீன்கொத்திப் பறவை

 

182. வள்உகிர் கிழித்த வடுஆழ் பாசடை = (தன்) பெரிய நகத்தால் கிழித்த வடு அழுந்திய பசுமையான இலைகளையும்

 

183. முள்அரைத் தாமரை முகிழ்விரி நாட்போது = முள்ளுடன் கூடிய தண்டையும் உடைய தாமரையின் அரும்பு விரிந்த அதிகாலைப் பொழுதில்

 

184. கொங்குகவர் நீலச் செங்கட் சேவல் = தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்களையும் உடைய ஆண்வண்டு

 

185. மதிசேர் அரவின் மானத் தோன்றும் = திங்களை வந்து சேர்வது, திங்களை மறைக்கும் பாம்பு போலத் தோன்றும்,

                                                               

186. மருதம் சான்ற மருத தண் பணை = மருத நிலத்தின் வளத்திற்குச் சான்றாக அமைந்த மருத நிலத்தின் குளிர்ச்சியான வயல்களும்,

 

187. அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் = அந்தணர்கள் நீங்காமல் இருக்கும் அரிய காவலையுடையதும்

 

188. அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் = அழகிய குளிர்ந்த அகழியை உடையதும் ஆகிய, அவ்வள்ளலின் ஆமூரை அடைந்தால்

 

189. வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின் = வெற்றியுண்டாகும்படி நடக்கும், வலிமை பொருந்திய கழுத்தையும்

 

190. உரன்கெழு நோன்பகட்டு உழவர் தங்கை = மனஉறுதியும் கொண்ட வலிமையான எருதுகளையுடைய உழவரின் தங்கை           

               

191. பிடிக்கை அன்ன பின்ழனுவீழ் சிறுபுறத்து = பெண்யானையின் துதிக்கையைப் போன்ற பின்னல் வீழ்ந்து கிடக்கும் முதுகையும்

 

192. தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப = வளையல் அணிந்த கைகளையும் உடைய பெண், தன் மக்களின் துணையோடு உங்களைப் போகாமல் தடுக்க

 

193.இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த = கரிய, வைரம் பாய்ந்த உலக்கையின் பூண் தேயுமாறு

 

194. அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு =நன்றாகக் குற்றிய அரிசியைக் கொண்டு சமைத்த வெண்மையான சோற்று உருண்டைகளோடு,

 

195. கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் = பிளவுபட்ட கால்களையுடை நண்டின் கறியோடு கலந்த உணவைப் பெறுவீர்கள்.             

 

கருத்துரை:

அன்றலர்ந்த நறுமணமுள்ள மலர்களை மாலையாகத் தொடுத்ததைப்போல் காட்சி அளிக்கும் கிளைகளையும், குறுகிய அடிமரத்தையும்கொண்ட காஞ்சி மரத்தின் கிளைகளில் ஏறி, பொன்னிறமான வாயையுடைய நீலமணி போன்ற மீன்கொத்திப் பறவை, நீண்ட நேரம் காத்திருந்து, வறண்ட காலத்திலும் நீர் வற்றாத அரிய குளத்தில் மூழ்கி, புலால் நாற்றம் வீசும் கயல்மீன்களைக் கவ்வி எடுக்கும். அவ்வாறு, மீன்கொத்திப் பறவை மீன்களைக் கவ்வி எடுக்கும்பொழுது, அதன் நகத்தால் கிழித்த வடு அழுந்திய பசுமையான இலைகளையும் முள்ளுடன் கூடிய தண்டையும் உடைய தாமரையின் அரும்பு விரிந்த மலர்களில், அதிகாலைப் பொழுதில், நீல நிறத்தையும் சிவந்த கண்களையும் உடைய ஆண்வண்டு தேனை நுகரும். அவ்வாறு, வண்டுவந்து தாமரை மலரில் அமர்வது, பாம்பு திங்களை மறைப்பது போல இருக்கும். அத்தகைய காட்சிகள் நடைபெறும் வளமான மருத நிலத்தில், குளிர்ச்சியான வயல்களும், அழகிய குளிர்ந்த அகழியும், அந்தணர்கள் நீங்காமல் இருக்கும் அரிய காவலையுமுடைய ஊர் ஆமூர். அந்த ஊரில் உள்ள உழவர்கள் வெற்றியுண்டாகும்படி நடக்கும், வலிமை பொருந்திய கழுத்தும் மனஉறுதியும்கொண்ட வலிமையான எருதுகளை உடையவர்கள். அந்த உழவர் குடும்பத்தில் உள்ள பெண்கள் பெண்யானையின் துதிக்கையைப் போன்ற பின்னல் வீழ்ந்து கிடக்கும் முதுகையும் வளையல் அணிந்த கைகளையும் உடையவர்கள். அத்தகைய ஆமூருக்கு நீங்கள் சென்றால், அங்குள்ள உழவர் குடும்பப் பெண்கள் தம் மக்களின் துணையோடு உங்களைப் போகாமல் தடுத்து, கரிய, வைரம் பாய்ந்த உலக்கையின் பூண் தேயுமாறு நன்றாகக் குற்றிய அரிசியைக் கொண்டு சமைத்த வெண்மையான சோற்று உருண்டைகளோடு, பிளவுபட்ட கால்களையுடை நண்டின் கறியோடு கலந்து கொடுக்கும் உணவை நீங்கள் பெறுவீர்கள்.

 

 

நல்லியக்கோடனின் ஊர்ச்சிறப்பு

 

 

எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்றுக்

கருமறி காதின் கவைஅடிப் பேய்மகள்

நிணன்உண்டு சிரித்த தோற்றம் போல

பிணன் உகைத்து சிவந்த பேர்உகிர் பணைத்தாள்

அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப                                                               200

 

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர்

சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே

 

அருஞ்சொற்பொருள்:

196. எரி = தீ; மறிந்து = சாய்ந்து; அன்ன = போல; இலங்குதல் = விளங்குதல்; எயிறு = பல்

 

197. கரு = கரிய; மறி = ஆட்டுக்குட்டி; கவை =பிளவுபட்ட

 

198. நிணன் = உடல் தசை

 

199. பிணன் = பிணம்; உகைத்தல் = செலுத்துதல்; உகைத்து = காலால் உதைத்து; உகிர் = நகம்; பணை = பெருமை; தாள் = கால்

 

200. அண்ணல் =தலைமை; துகள் = தூசு; அவிப்ப = அடக்க

 

`201. நீறு =புழுதி; அவன் = நல்லியக்கோடன்; சாறு = விழா; அயர் தல் = கொண்டாடுதல்

 

202. சேய்த்தும் = தொலைவானது; நணியது = அண்மையில் உள்ளது

 

பதவுரை:

196. எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று = தீ கீழே சாய்ந்தது போன்ற நாக்கையும், ஒளிரும் பற்களையும்,

 

197.  மறி காதின் கவை அடி பேய்மகள் = கரிய ஆட்டுக்குட்டிகளை அணிந்த காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்

 

198. நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல = இறந்தவர்களின் தசையைத் தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப்போல்,

 

199. பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணைத்தாள் = பிணங்களைக் காலால் உதைத்ததால் சிவந்த பெரிய நகங்களையும் பெரிய கால்களையும் உடைய

 

200. அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப = தலைமைத் தன்மை பொருந்திய யானைகளிலிருந்து வடியும் மதநீர், அருவிபோலச்  சொரிந்து தூசியை அடக்க          

                                                               

201. நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் = புழுதி அடங்கின தெருவினையுடைய, நல்லியக்கோடனின் விழா நடக்கின்ற பழைய ஊர்

 

202.சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே = தொலைவில் இல்லை; சிறிது அருகிலேதான் உள்ளது.

 

கருத்துரை:

எரியும் தீ கீழே சாய்ந்தது போன்ற நாக்கையும், ஒளிரும் பற்களையும், கரிய ஆட்டுக்குட்டிகளை அணிந்த காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள் இறந்தவர்களின் தசையைத் தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப்போல், பிணங்களைக் காலால் உதைத்ததால் சிவந்த பெரிய நகங்களையும் பெரிய கால்களையும் உடைய தலைமைத் தன்மை பொருந்திய யானைகளின் தோற்றம் இருக்கும்.   அந்த யானைகளிலிருந்து வடியும் மதநீர், அருவி போலச் சொரிந்து தெருவில் உள்ள தூசியை அடக்கும். அத்தகைய, புழுதி அடங்கிய தெருவினையுடைய, நல்லியக்கோடனின் விழா நடக்கின்ற பழைய ஊர் தொலைவில் இல்லை; சிறிது அருகிலேதான் உள்ளது.

 

 

நல்லியக்கோடனின் அரண்மனை வாயில்

 

பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்

அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்

கடவுள் மால்வரை கண்விடுத்து அன்ன                                 205

 

அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி

 

அருஞ்சொற்பொருள்:

203. பொருநர் = கிணைப் பறை கொட்டுபவர்கள்

 

204. அருமறை = அரிய வேதம்; நாவின் = நாக்கையுடைய

 

205. மால் = பெரிய; வரை = மலை; விடுத்தல் = பிரிதல் (விழித்தல்); அன்ன = போல

 

206. அடையா = அடைக்கப்படாத; அவன் = நல்லியக்கோடன்; கடை = வாயில்; குறுகி = அணுகி

 

பதவுரை:

203. பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும் = கிணைப் பறையைக் கொட்டுபவர்களாயினும் புலவர்களாயினும்

 

204. அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் = அரிய மறையைக் கற்றுணர்ந்த நாவினை உடைய அந்தணர் ஆயினும்

 

205. கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன = கடவுள் இருப்பதாகாக் கருதப்படும் பெரிய மலை கண் விழித்துப் பார்ப்பது போன்ற

 

206. அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி = அடைக்கப்படாத வாயிலையுடைய நல்லியக்கோடனின் அரிய வாயிலை நெருங்கி

 

கருத்துரை:

கிணைப்பறையைக் கொட்டி மன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசுபெற வருபவர்களுக்கும், புலவர்களுக்கும், அரிய மறையைக் கற்றுணர்ந்த நாவினை உடைய அந்தணர்க்கும், கடவுள் இருப்பதாகாக் கருதப்படும் பெருமைக்குரிய மலை (இமய மலை) கண் விழித்துப் பார்ப்பது போன்ற அடைக்கப்படாத வாயிலையுடைய நல்லியக்கோடனின் அரிய வாயிலை நெருங்கி

 

 

சான்றோர் புகழ்தல்

 

செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்

இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும்

செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த

அருஞ்சொற்பொருள்:

 

207. செய்ந்நன்றி = பிறர் செய்த நன்மை; சிற்றினம் = அறிவும் ஒழுக்கமும் இல்லாதவர்கள்; இன்மையும் = இல்லாமையும்

 

208. இன்முகம் = இனிய முகம்; இனியன் = இனிய மொழி பேசுபவன்

 

209. செறிந்து = நிறைந்து; ஏத்த = புகழ

 

பதவுரை:

207. செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும் = பிறர் தனக்குச்செய்த நன்மையை மறவாத தன்மையையும், அறிவும் ஒழுக்கமும் இல்லாதவர்களோடு சேராமல் இருக்கும் இயல்பையும்

 

208. இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும் =   இனிய முகம் உடையவனாகவும் இனிய சொற்களைப் பேசுகின்றவனாகவும் இருப்பதையும்

 

209. செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த = நிறைந்து விளங்குகின்ற சிறப்பையும் அறிந்த சான்றோர் புகழ

 

கருத்துரை:

பிறர் தனக்குச் செய்த நன்மையை மறவாத தன்மையையும், அறிவும் ஒழுக்கமும் இல்லாதவர்களோடு சேராமல் இருக்கும் இயல்பையும், இனிய முகம் உடையவனாகவும் இனிய சொற்களைப் பேசுகின்றவனாகவும் இருப்பதையும், நிறைந்து விளங்குகின்ற சிறப்பையும் அறிந்த சான்றோர் அவனைப் புகழ

 

நல்லியக்கோடனைப் போர்மறவர் போற்றலும்

 

அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும்      210

ஆண்அணி புகுதலும் அழிபடை தாங்கலும்

வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த

 

அருஞ்சொற்பொருள்:

210. அஞ்சினர் = தன்னைக் கண்டு அஞ்சும் பகைவர்க்கு; வெஞ்சினம் = கொடிய சினம்

 

211. ஆண் = வீரன் (பகை வீரன்); ஆண்அணி = பகை வீரர்கள் இருக்கும் அணி; அழிபடை = தளர்ச்சி அடையும் தன் படை; தாங்கல் = துணையாக இருந்து காத்தல்

 

212. மீக்கூறல் = புகழ்தல், வியத்தல்; வாள் மீக்கூற்று = வாளைவிட மேலான வலிவுடைய சொற்கள்; வயவர் = படைவீரர்; ஏத்த =புகழ

 

பதவுரை:

210. அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும் = தனக்கு அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய சினம் இல்லாமையையும்

 

211. ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் = பகை வீரரின் அணியில் புகுதலையும், தளர்ச்சியுற்ற தன் படைக்குத் துணையாக இருந்து காத்தலையும்

 

212. வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த = வாளைவிட மேலான வலிமையுடைய சொற்களால் வீரர்கள் புகழ,

 

கருத்துரை:

தனக்கு அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய சினம் இல்லாமையையும், பகை வீரரின் அணியில் புகுதலையும், தளர்ச்சியுற்ற தன் படைக்குத் துணையாக இருந்து காத்தலையும், வாளைவிட மேலான வலிமையுடைய சொற்களால் வீரர்கள் புகழ,

 

மகளிர் வாழ்த்துதல்

 

கருதியது முடித்தலும் காமுறப் படுதலும்

ஒருவழிப் படாமையும் ஓடியது உணர்தலும்

அரிஏர் உண்கண் அரிவையர் ஏத்த                            215

 

 

அருஞ்சொற்பொருள்:

213. கருதியது = நினைத்தது; காமுறப்படுதல் = பிறரால் விரும்பப்படுதல்

 

214. ஒருவழிப் படுதல் = தன்னை விரும்புபவர்களின் வசமாகுதல்; ஓடியது = பிறர் மனதில் உள்ளவற்றை உணரும் ஆற்றல்

 

215. அரி = செவ்வரி (கண்களில் உள்ள சிவந்த கோடுகள்); ஏர் = அழகு; உண்கண் = மையுண்ட கண்கள்; அரிவையர் = மகளிர்; ஏத்த = புகழ

 

பதவுரை:

213. கருதியது முடித்தலும் காமுறப்படுதலும் = தான் எண்ணியதை முடிக்கும் தன்மையையும், பிறரால் விரும்பப்படுதலையும்

 

214.  படாமையும் ஓடியது உணர்தலும் = தான் அவர்கள் வசமாகாமையும், பிறர் மனங்களில் உள்ளவற்றை புரிந்துகொள்ளும் ஆற்றலையும்,

 

215. அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த = செவ்வரி பொருந்திய அழகிய மையுண்ட கண்களையுடைய மகளிர் புகழ,

 

கருத்துரை:

தான் எண்ணியதை முடிக்கும் தன்மையையும், பிறரால் விரும்பப்படுதலையும், தான் அவர்கள் வசமாகாமையும், பிறர் மனங்களில் உள்ளவற்றை புரிந்துகொள்ளும் ஆற்றலையும், செவ்வரி பொருந்திய அழகிய மையுண்ட கண்களையுடைய மகளிர் புகழ,

 

பரிசிலர் புகழ்தல்

 

அறிவு மடம் படுதலும் அறிவு நன்கு உடைமையும்

வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்

பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த

 

அருஞ்சொற்பொருள்:

216. மடம் = அறியாமை

 

217: வரிசை = தகுதி

 

218. ஏத்த = புகழ

 

பதவுரை:

216. அறிவு மடம் படுதலும் அறிவு நன்கு உடைமையும் = தான் கூறுவதை அறிந்துகொள்ளக்கூடிய அறிவில்லாதர்களிடத்து அறிவு குறைந்தவனாகவும், அறிவுடையோரிடம் தன் அறிவை மெய்ப்பித்துக் காட்டுதலும்

 

217. வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும் =பரிசிலரின் தகுதியை அறிந்து அவர்களுக்கு எல்லையில்லாமல் பரிசுகளை வாரி வழங்குவதும்  

 

218. பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த = பரிசில் பெற்று வாழும் வாழ்க்கையையுடைய பரிசிலர் புகழ்ந்துசொல்ல,

 

கருத்துரை:

தான் கூறுவதை அறிந்துகொள்ளக்கூடிய அறிவில்லாதர்களிடத்து அறிவு குறைந்தவனாகக் காட்டுதல், அறிவுடையோரிடம் தன் அறிவை மெய்ப்பித்துக் காட்டுதல், பரிசிலரின் தகுதியை அறிந்து அவர்களுக்கு எல்லையில்லாமல் பரிசுகளை வாரி வழங்குதல் ஆகிய பண்புகளைப் பிறரிடம் பரிசில் பெற்று வாழும் வாழ்க்கையையுடைய பரிசிலர் புகழ,

 

நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி

 

பல் மீன் நடுவண் பால் மதி போல

இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி             220

 

அருஞ்சொற்பொருள்:

219. பல் = பல; மீன் = விண்மீன்கள்; மதி = நிறைமதி

 

220. இன்நகை = மகிழ்ச்சி; ஆயம் = திரள்; குறுகி = அணுகி

 

பதவுரை:                  

219. பல் மீன் நடுவண் பால் மதி போல = விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால் போன்ற ஒளியை உடைய நிறைமதிபோல்

 

220. இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி = மகிழ்ச்சியோடு சான்றோர், மறவர், மகளிர், பரிசிலர் ஆகியோர் நடுவே வீற்றிருக்கும் நல்லியக்கோடனை அணுகி

 

கருத்துரை:

விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால் போன்ற ஒளியை உடைய நிறைமதிபோல், மகிழ்ச்சியோடு சான்றோர், மறவர், மகளிர், பரிசிலர் ஆகியோர் நடுவே வீற்றிருக்கும் நல்லியக்கோடனை அணுகி

 

 

 

யாழின் தன்மை

 

பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன

அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்

மணி நிரைத்தன்ன வனப்பின் வாய் அமைத்து

வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்துக்

கானக் குமிழின் கனிநிறம் கடுப்பப்                                         225

 

புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்து

அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்

பாடுதுறை முற்றிய பயன் தெரி கேள்விக்

கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக

நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது                                         230

 

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்

இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்

ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்

தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்

நீ சில மொழியா அளவை

 

 

அருஞ்சொற்பொருள்:

221. பைங்கண் = பசுமையான கண்; ஊகம் = கருங்குரங்கு

 

222. அம் = அழகிய; கோடு = தண்டு; செறிந்த = நெருங்கிய; அவிழ்ந்து = நெகிழ்ந்து; வீங்குதல் = இறுகுதல்; திவவு =வார்க்கட்டு

 

223 நிரைத்தல் = வரிசையாக வைத்தல்; வனப்பு = அழகு

 

224. வயிறு = யாழின் நடுவிடம்; ஒழுகிய =ஒழுங்குபட்ட; அகளம் = யாழ்ப்பத்தர் (யாழின் அடிப்பக்கம்)

 

225. கானம் = காடு; குமிழ் = குமிழ மரம்; கடுப்ப = போல

 

226. பொலிதல் =விளங்குதல்; பச்சை = தோல்; தேம் = தேன்

 

227. இலிற்றுதல் = சொரிதல்; புரி = முறுக்கு

 

228. பாடுதுறை = பாடுதற்குரிய துறை; முற்றிய = முற்றுமாறு; பயன்= இனிமை; கேள்வி =இசை

 

229. கூடுதல் = சுதி சேர்தல்; இயம் = வாத்தியம் (இசைக்கருவி); குரல் = இசை

 

230. பண்ணி = ஆக்கி

 

231. முதுவோர் = பெரியோர்; முகிழ்த்த = கூப்பிய          

 

232. மலர்தல் = அகலுதல்  

 

233. எரோர் = உழவர்; நிழன்ற = நிழல் தருகின்ற; கோல் = செங்கோல்

 

235. தேரோர் = தேரில் வரும் பகைவர்க்கு; அழன்ற = வெம்மையான

 

236. அளவை = எல்லை; மொழியா அளவை = கூறுவதற்கு முன்னர்

 

பதவுரை:

221. பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன = பசுமையான கண்களையுடைய கருங்குரங்கு பாம்பின் தலையைப் பிடித்தால், அப்பாம்பு குரங்கின் கையை எப்படி இறுக்கியும் நெகிழ்த்தும் பிடிக்குமோ அதுபோல்,

 

222. அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் = அழகிய தண்டில் நெருக்கமாகச் சுற்றி நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்

 

223. மணி நிரைத்தன்ன வனப்பின் வாய் அமைத்து = இரண்டு விளிம்பும் சேரத் தைத்து முடுக்கிய ஆணிகள், மணிகளை வரிசையாக வைத்ததைப் போன்ற அழகினையும்

 

224. வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்துக் = வயிறு சேர்ந்த ஒழுங்கான தொழில் வகை அமைத்த யாழின் குடத்தின் மேல் உள்ள,

                                                                               

225.  குமிழின் கனிநிறம் கடுப்பப் = குமிழ மரத்தின் பழத்தின் நிறத்தைப் போன்ற

                               

226. புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்து = புகழப்படும் தொழில்வினை சிறந்து விளங்கும் தோல் போர்வையோடு; தேன் (போன்ற தன்மையைப்) பெய்துகொண்டு,

 

227. பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின் = அமிழ்தத்தைப் தன்னிடத்தில் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கின நரம்பையும் உடைய

 

228. பாடுதுறை முற்றிய பயன் தெரி கேள்வி = பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளை

 

229. கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக = சுதிசேர்த்த இனிய யாழின் நரம்பொலியும் குரலும் ஒன்றிக் கலக்க

 

230. நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது = இசைநூல் கூறுகின்ற முறையால் இயக்கி, விடாது

               

231. முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் =” பெரியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்” என்றும்

 

232. இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் =” வீரர்கள் தழுவுவதற்குத் தகுந்த அகன்ற மார்பை உடையோய்'’என்றும்

 

233. ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் = ”உழவர்க்கு நிழல் தருகின்ற செங்கோலை உடையவனே” என்றும்,

 

234. தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் = “தேரினையுடையோர்க்கு வெம்மையான வேலினையுடையோய்” என்றும்,

 

235. நீ சில மொழியா அளவை =  நீ அவனைப் புகழ்ந்து சில சொற்களைக் கூறி முடிப்பதற்கு முன்னர்

 

கருத்துரை:

 பசிய கண்களையுடைய குரங்கு ஒன்று பாம்பின் தலையைப் பிடித்தால், அது எப்படி அப்பிடியிலிருந்து விடுபட, இறுக்க வேண்டிய இடத்தில் இறுக்கி, நெகிழ வேண்டிய இடத்தில் நெகிழுமோ, அதுபோல் குரங்கின் கையையொத்த யாழின் தண்டில் உள்ள பாம்பின் உடல் போன்ற யாழின் நரம்பை, இறுக்கவும் நெகிழவும் செய்தற்கமைந்த திவவு எனப்படும் பாம்பின் தலையையொத்த வார்க்கட்டு அமைந்திருக்கும்.  யாழின் இரு விளிம்புகளையும் இணைக்க வரிசையாக முடுக்கப்பட்ட ஆணிகள், வரிசையாகக் கோர்க்கப்பட்ட மணிகள்போல் அழகாகாகக் காணப்படும். பத்தர் எனப்படும் யாழின் அடிப்பக்கத்தில் குடம்போல் இருக்கும் நடுப்பாகம் தண்டினோடு பொருந்துமாறு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும்.  காட்டில் காணப்படும் குமிழ மரத்தின் செந்நிறப் பழங்கள் போல சிவப்பு நிறம் ஏற்றப்பட்ட, புகழ்தற்குரிய வேலைப்பாடு அமைந்த அழகான போர்வை யாழின்மேல் போர்த்தப்பட்டிருக்கும். போர்வையை அகற்றி அந்த யாழை இசைக்க, யாழின் நரம்புகளிலிருந்து தேன்வழிந்து பாய்வது போலவும் அமிழ்தத் துளிகள் பொழிவது போலவும் இனிய இசை பிறக்கும்.  பாடுதற்குரிய அனைத்தையும் நீங்கள் முழுமையாகப் பாடுவதற்கு ஏற்ற வகையில், இசைத்தன்மையைத் தன்னிடத்தில் முற்றும் பெற்ற இனிய யாழை, இசை நூல்கள் கூறும் முறைப்படி, செம்பாலை என்னும் இசையை இயக்கவும். அவ்வாறு யாழினை இசைத்தவாறே, நல்லியக்கோடன்,”சான்றோர் பெருமக்கள்முன் குவித்த கையினன்; இளம் வீரர்களைப் பாராட்டி அணைத்துக்கொள்ளும் மலர்ந்த மார்பினன்; ஏர்த்தொழில் புரியும் உழவர்களுக்கு ஆதரவாக நிழல்தரவல்ல செங்கோலை ஏந்தியவன்; தேரினையுடைய பகைவர்க்கு வெப்பமான வேலைக் கையில்கொண்டவன்.” என்று சில புகழ்மொழிகளை நீங்கள் கூறி முடிப்பதற்கு முன்பே,

 

 

மன்னன் பரிசிலரை உபசரிக்கும் முறை

 

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . மாசில்                                       235

 

காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ

பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி

கா எரியூட்டிய கவர் கணைத் தூணி

பூ விரி கச்சை புகழோன் தன்முன்

பனி வரைமார்பன் பயந்த நுண்பொருள்                                240

 

பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்

வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த

இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து

விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி

ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி                                      245

 

 

 

 

அருஞ்சொற்பொருள்:

235. மாசில் = மாசு+இல் = குற்றமற்ற

 

236. காம்பு = மூங்கில்; சொலித்தல் = உரித்தல்; அறுவை = ஆடை; உடீஇ = உடுத்திக்கொள்ளச் செய்து

 

237. வெகுளுதல் =சினத்தல்; தேறல் = கள்ளின் தெளிவு; நல்கி = கொடுத்து

 

238. கா = காண்டவ வனம்; எரியூட்டிய = தீக்கிரையாக்கிய; கவர் = பல; கணை =அம்பு; தூணி = அம்புறாத்தூணி

 

239. கச்சை = ஆடை; புகழோன் = புகழுடையவன்

 

240. பனி = பனி; வரைமார்பன் = மலை போன்ற மார்பையுடையவன்; பயந்த = கொடுத்த (எழுதிய); நுண்பொருள் = நுணுக்கமான பொருள்

 

241. பனுவல் = நூல்; வழாஅ = வழுவாத; அடிசில் = உணவு      

 

242. வாள் = ஒளி; விசும்பு = வானம்; கோள்மீன் = கோள்கள்

 

243. எள்ளும் = இகழும் (பழிக்கும்)

 

244. விரும்புவன = விரும்பி உண்ணுபவற்றை; பேணி =உபசரித்து

 

245. ஆனா =குறைவில்லாத; விருப்பின் =விருப்பத்தோடு; ஊட்டி =உண்ணச் செய்து

 

பதவுரை:

235. மாசில் = மாசில்லாத

                               

236. காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ = மூங்கிலின் உட்பட்டையை உரித்தது போன்ற மெல்லிய ஆடையை உடுக்கச்செய்து,

 

237. பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி = பாம்பு சீறியெழுவதைப் போன்ற எழுச்சியைத் தரும் கள்ளின் தெளிவைக் கொடுத்து,

 

238. கா எரியூட்டிய கவர் கணைத் தூணி = காண்டவம் என்ற காட்டை எரித்த[5] அம்பைக்கொண்ட அம்பறாத்தூணியையுடைய

 

239. பூ விரி கச்சை புகழோன் தன்முன் = பூத்தொழிலோடு கூடிய ஆடையை அணிந்த புகழ்மிக்கவனின் (அருச்சுனனின்)அண்ணனும்

 

240. பனி வரைமார்பன் பயந்த நுண்பொருள் = பனியுடைய இமயம் போன்ற மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுண்மையான கருத்துகளையுடைய 

 

241. பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில் = சமையல் நூல் கூறும் முறைகளிலிருந்து மாறாமால் சமைத்த பல்வேறு உணவு வகைகளை

 

242. வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த = ஒளியையுடைய வானத்தில் கோள்கள் சூழ்ந்த

 

243. இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து = இளங்கதிர்களையுடைய கதிரவனை எள்ளி நகையாடும் தோற்றமுடைய,

 

244. விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி = விளங்குகின்ற பொன்னால் செய்த கலத்தில் இட்டு நீ விரும்புவனவற்றை அன்புடன் கொடுத்து,

 

245. ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி = உன்மீது உள்ள மிகுந்த விருப்பத்தால், தானே நின்று உண்ணச் செய்து,

 

கருத்துரை:

மாசில்லாத மூங்கிலின் பட்டையை உரித்தது போன்ற மெல்லிய ஆடையை உடுத்திக்கொள்ளவும், பாம்பு சீறியெழுவதைப் போன்ற எழுச்சியைத் தரும் கள்ளின் தெளிவைக் குடிப்பதற்கும் அளிப்பான். காண்டவம் என்ற காட்டை எரித்த கணையைக்கொண்ட அம்பறாத்தூணியையுடைய, பூத்தொழிலோடு கூடிய ஆடையை அணிந்த புகழ்மிக்கவனின் (அருச்சுனனின்)அண்ணனும், பனியுடைய இமயம்  போன்ற மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுண்மையான கருத்துகளையுடைய  சமையல் நூல் கூறும் முறைகளிலிருந்து மாறாமால் சமைத்த பல்வேறு உணவு வகைகளை, ஒளியையுடைய வானத்தில் கோள்கள் சூழ்ந்த, இளங்கதிர்களையுடைய கதிரவனை எள்ளி நகையாடும் தோற்றமுடைய, விளங்குகின்ற பொன்னால் செய்த கலத்தில் இட்டு, நீ விரும்புவனவற்றை அன்புடன் கொடுத்து, உன்மீது உள்ள மிகுந்த விருப்பத்தால், தானே நின்று உண்ணச் செய்து,

 

 

                                                                               

 

 பரிசளிக்கும் சிறப்பு

 

திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புலம் அகற்றி

விறல்வேல் மன்னர் மன்எயில் முருக்கி

நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின்

வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு

பருவ வானத்து பால்கதிர் பரப்பி                                              250

 

உருவ வான்மதி ஊர்கொண்டு ஆங்கு

கூர்உளி பொருத வடுஆழ் நோன்குறட்டு

ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமியொடு

சிதர்நனை முருக்கின் சேண்ஓங்கு நெடுஞ்சினை

ததர்பிணி அவிழ்ந்த தோற்றம் போல                                      255

 

உள்அரக்கு எறிந்த உருக்குறு போர்வை

கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி

ஊர்ந்து பெயர்பெற்ற எழில்நடை பாகரொடு

மாசெலவு ஒழிக்கும் மதனுடை நோன்தாள்

வாள்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ                             260

 

அன்றே விடுக்கும் அவன் பரிசில்               

 

அருஞ்சொற்பொருள்:

246. திறல் = வலிமை; சால் = மிகுதி; வென்றி = வெற்றி; தெவ் = பகை; புலம் = இடம்; அகற்றி = நீக்கி

 

247. விறல் = வெற்றி; மன் = நிலைபெற்ற; எயில் = அரண்; முருக்கி = அழித்து

 

248. நயவர் = தன்னை விரும்பி வருபவர்கள்; புன்கண் = வறுமை

 

249. வயவர் = வீரர்; வான் =சிறப்பு, நன்மை; கேழ் =ஒப்பு, நிறம்; வான்கேழ் = உயர்ந்த நிறம்

 

250. பருவ வானம் – இங்கு கூதிர்க் காலத்து வானத்தைக் குறிக்கிறது; பால்கதிர் = பால் போன்ற ஒளி

 

251. உருவம் = நிறைந்த வடிவம்; வான்மதி = வெண் திங்கள்; ஊர்கொண்டாங்கு = ஊர்+கொண்டு + ஆங்கு = ஊர்ந்து சென்றவாறு

 

252. பொருதல் = பொருந்தல்; ஆழ் = ஆழ்ந்த; நோன் = வலிய; குறடு = தேரின் அச்சுக்கோக்கும் இடம்

 

253. ஆரம் = சக்கரத்தின் குடத்தையும் விளிம்பையும் இணைக்கும் மரக்கட்டைகள்; அயில்வாய் = சக்கரத்தைச் சுற்றியுள்ள இரும்பு விளிம்பு; நேமி = சக்கரம்

 

254. சிதர்தல் = சிந்துதல்; நனை = அரும்பு; முருக்கு = முருக்க மரம்; சேண் = சேய்மை; ஓங்கு = உயர்ந்து; நெடுஞ்சினை = நெடிய கிளை

 

255. ததர் = கொத்து; அவிழ்தல் = மலர்தல்

 

256. உள் = உள்ளே; எறிந்த = இட்டமைத்த

 

257. கருமை = வலிமை; வினைஞர் = தொழில் செய்வோர்; கைவினை = கைத்தொழில்; முற்றி = முற்றுப்பெற்ற பிறகு

 

258. ஊர்ந்து = தேரில் ஏறிச் சென்று; எழில் = அழகு; பாகர் = தேரை ஓட்டுபவர் (இங்கு ஆகுபெயராகத் தேரைக் குறிக்கிறது)

 

259. மா =குதிரை; செலவு = ஓட்டம்; ஒழிக்கும் =பின் நிறுத்தும்; மதன் = வலிமை; நோன்தாள் =வலிமையான் கால்கள்

 

260. வாள் =ஒளி; பாண்டில் = வெள்ளை எருது; வலவன் =ஓட்டுபவன்; தரீஇ = தந்து

 

261. விடுக்கும் = அனுப்பும்; அவன் = நல்லியக்கோடன்

 

பதவுரை:

246. திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி = வலிமையாகப் போரிட்டுப் வெற்றிபெற்றுப் பகைவர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றி

 

247. விறல் வேல் மன்னர் மன்எயில் முருக்கி = வெற்றியுடைய வேலினையுடைய பகைவேந்தர்களின் அரண்களை அழித்து

 

248. நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் = விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையைப் போக்கிய பின்னர்

 

249. வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு =(தன்)படைவீரர்கள் கொண்டுவந்த நல்ல பொருட்குவியலோடு

 

250. பருவ வானத்து பால் கதிர் பரப்பி = கூதிர்க் காலத்து வானில் பால் போன்ற ஒளியைப் பரப்பி,

 

251. உருவ வான் மதி ஊர்கொண்டு ஆங்கு = நிறைமதி ஊர்ந்து செல்வதைப் போன்ற

 

252. கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு = கூரிய சிற்றுளிகளால் செதுக்கிச் செய்யப்பட்ட, வலிமையான சக்கரத்தின் குடத்தில்

 

253. ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு =பொருத்திய ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட சக்கரத்துடன்,

 

254. சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை = சிந்துகின்ற அரும்புகளையுடைய முருக்க மரத்தின் உயர்ந்து ஓங்கி வளர்ந்த கிளைகளில்

 

255. ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல =       உள்ள பூங்கொத்துகள் முறுக்கு நெகிழ்ந்த காட்சியைப் போல, 

                                                                                                               

256. உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை = உள்ளே உருக்கப்பட்ட சிவந்த அரக்கை வைத்துச் செய்த மேற்பலகையையும்

 

257. கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றி = வலிய தொழில் செய்யும் தச்சரின் கைத்தொழில் முற்றுப்பெற்ற பின்னர்

 

258. ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு = தேரில் ஏறிச்சென்று பார்த்து, பெயர்பெற்ற அழகிய நடையுடைய தேருடன்

 

259. மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் = குதிரையைவிட விரைவாகச் செல்லும் வலிமையுள்ள கால்களையும்

 

260. வாள்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ = ஒளியுள்ள முகத்தினையும் உடைய வெள்ளை எருதையும் (அதனைச் செலுத்தும்) பாகனோடு கொடுத்து,        

 

261.அன்றே விடுக்கும் அவன் பரிசில் = அன்றே நல்லியக்கோடன் உங்களை வழி அனுப்பிவைப்பான்.

 

கருத்துரை:

நல்லியக்கோடன் வலிமையாகப் போரிட்டு வெற்றிபெற்றுப் பகைவர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றியவன்; வெற்றியுடைய வேலினையுடைய வேந்தர்களின் நிலைபெற்ற அரண்களை அழித்தவன்; தன்னை விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையைப் போக்கிய பின்னர், தன் படைவீரர்கள் பகையரசர்களிடமிருந்து கொண்டுவந்த நல்ல பொருட்களை அவர்களுக்குக் கொடுத்தவன். குளிர்க்காலத்து வானத்தில் முழு உருவம் பெற்றுப் பால் போன்ற ஒளியைப் பரப்பி, வெண்ணிறமான நிறைமதி ஊர்ந்து செல்வதைப் போல், கூரிய சிற்றுளிகளால் செதுக்கிச் செய்யப்பட்ட, வலிமையான சக்கரத்தின் குடத்தில் பொருத்திய ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட தேர்ச்சக்கரங்களோடு கூடிய தேரின் மேற்பலகை வானளாவ உயர்ந்த முருக்க மரத்தின் நீண்ட கிளைகளில் நெருக்கமாகப் பூங்கொத்துகள் மலர்ந்திருப்பதைப் போல, உருக்கப்பட்ட சிவந்த அரக்கை வைத்துச் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வலிய தொழில் செய்யும் தச்சரின் கைத்தொழில் முற்றுப்பெற்ற பிறகு, தேரில் ஏறிச்சென்று, ’நன்றாக ஓடுகிறதா’  என்று பார்த்து, பெயர்பெற்ற அழகிய நடையுடைய தேரை, அதைச் செலுத்தும் பாகரோடு நல்லியக்கோடன் தருவான். குதிரையைவிட விரைவாகச் செல்லும் வலிமையுள்ள கால்களையும் ஒளியுள்ள முகத்தினையும் உடைய வெள்ளை எருதையும் (அதனைச் செலுத்தும்) பாகனோடு கொடுத்து, அன்றே அவன் உங்களை வழி அனுப்பிவைப்பான்.

 

                                       நல்லியக்கோடனின் புகழ்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . மென் தோள்

துகில்அணி அல்குல் துளங்குஇயல் மகளிர்

அகில்உண விரித்த அம்மென் கூந்தலின்

மணிமயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பி

துணிமழை தவழும் துயல்கழை நெடுங்கோட்டு                                265

 

எறிந்து உரும் இறந்த ஏற்றுஅருஞ் சென்னி

குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணி

செல்இசை நிலைஇய பண்பின்

நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே.

                                                                                                                                                 

அருஞ்சொற்பொருள்:

261. மென்தோள் = மென்மையான தோள்

 

262. துகில் = ஆடை; அல்குல் = இடை; துளங்கல் = அசைதல்

 

263. உண = உண்ட (புகையூட்ட); அம் = அழகிய

 

264. மணி = நீலமணி; கலாபம் = தோகை; மஞ்சு = மேகம்

 

265. துணி = தெளிவு; மழை = மேகம்; துயல்தல் = அசைதல்; கழை = மூங்கில்; கோடு =  மலையின் உச்சி

 

266. எறிதல் = முட்டுதல் (மோதுதல்); உரும் = இடி; இறந்த = வீழ்ந்த; ஏற்றுஅரும் = ஏறுவதற்கு அரிதான; சென்னி =உச்சி

 

267. குறிஞ்சி = மலையும் மலை சார்ந்த இடமும்; கோமான் = தலைவன்; கொய்தல் = பறித்தல்; கண்ணி = தலையில் அணியும் பூமாலை

 

268. நிலைஇய =நிலைபெற்ற

 

269. நயத்தல் = விரும்புதல்; செலினே = சென்றால்

 

பதவுரை:

261. மென் தோள் = மெல்லிய தோளினையும்,

 

262. துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் = ஆடை அணிந்த இடையும், அசைந்தாடும் நடையும் உடைய மகளிர்

 

263. அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் = அகிற்புகையை ஊட்டுதற்கு விரித்த, அழகும் மென்மையும் உடைய, கூந்தலைப் போல்

 

264. மணிமயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பி = நீலமணி போன்ற நிறமுடைய மயில் தனது தோகையை விரித்து ஆடுவதற்குக் காரணமான கரிய மேகங்கள் வெண்மேகங்களுக்கு இடையே பரவி

 

265. துணி மழை தவழும் துயல் கழை நெடுங்கோட்டு = தெளிந்த மேகம் தவழும் அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தில்,

                                                               

266.  உரும் இறந்த ஏற்று அருஞ்சென்னி = இடி இடித்துச் சென்ற, பிறர் ஏறுவதற்கு அரிதாகிய உச்சியை உடைய,

 

267. குறிஞ்சிக் கோமான் கொய் தளிர்க் கண்ணி = மலைகள் மிக்க நிலத்திற்குத் தலைவன் கொய்யப்பட்ட தளிர்கள் கலந்த மாலையினையும்,

 

268.  செல்இசை நிலைஇய பண்பின் = பிறரிடம் நிலைத்து நிற்காமல் மறையும் புகழ் தன்னிடத்தே நிலைத்து நிற்பதற்குரிய பண்புகளையுமுடைய

 

269. நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே = நல்லியக்கோடனை விரும்பி நீங்கள் சென்றால்

 

கருத்துரை:

மெல்லிய தோளினையும், ஆடை அணிந்த இடையும், அசைந்தாடும் நடையும் உடைய மகளிர்

அகிற்புகையை ஊட்டுதற்கு விரித்த, அழகும் மென்மையும் உடைய, கூந்தலைப் போல் நீலமணி போன்ற நிறமுடைய மயில், தனது தோகையை விரித்து ஆடுவதற்குக் காரணமான கரிய மேகங்கள் வெண்மேகங்களுக்கு இடையே பரவித் தவழ்ந்து செல்லும். இந்தக் கரிய மேகங்கள் மூங்கில் விளையும் நெடிய மலையின் சிகரத்தில், இடி இடித்துச் செல்கின்ற, பிறர் ஏறுவதற்கு அரிதாகிய உச்சியை உடைய, மலைகள்மிக்க நிலத்திற்குத் தலைவன் நல்லியக்கோடன். அவன் கொய்யப்பட்ட தளிர்கள் கலந்த மாலையினையும், பிறரிடம் நிலைத்து நிற்காமல் மறையும் புகழ் தன்னிடத்தே நிலைத்து நிற்பதற்குரிய பண்புகளையுமுடையவன். இத்தகைய சிறப்புடைய நல்லியக்கோடனை நீங்கள் விரும்பிச் செல்வீராக!

 



[1]. பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார். சிறுபாணாற்றுப்படை (பக்கம் 14). திருநெல்வேலி: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்.

 

[2]. கண்ணி என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. இங்கு கண்ணி என்ற சொல், தலையில் அணியும் மாலையைக் குறிக்கிறது. குரங்குக்குப் பூவால் தொடுத்த மாலையை சூட்டுவது வழக்கிலிருந்ததாகத் தெரியவில்லை. குரங்குக்கு நெட்டியால் செய்த மாலையை அணிவிப்பது வழக்கிலிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே, இங்கு ‘செய்பூங் கண்ணி’ என்பதற்கு, நெட்டியால் செய்த மாலை என்று பொருள்கொள்வது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

 

[3]. தூங்குதல் என்ற சொல்லுக்குத் தொங்குதல் என்று பொருள். எயில் என்ற சொல்லுக்குக் கோட்டை என்று பொருள். எறிதல் என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஆகவே, ’தூங்கெயில் எறிந்த’ என்பதற்கு ’ஆகாயத்தில் தொங்கும் கோட்டையை அழித்த’ என்று பொருள். பண்டைக் காலத்தில் அசுரன் ஒருவன் வானத்தில் தொங்கும் கோட்டையைக் கடவுளிடமிருந்து வரமாகப் பெற்றான் என்றும், அந்த அசுரன் தான் விரும்பிய இடத்திற்குச் சென்று, அந்தணர் அறவோர் முதலியோரைத் துன்புறுத்தியதாகவும், சோழ மன்னன் ஒருவன் ஆகாயத்தில் இருந்த கோட்டையை அழித்ததாகவும் கூறப்படுகிறது.

 

[4]. பகைவர்கள் மிகுதியாக இருப்பதைக் கண்டு அஞ்சி, நல்லியக்கோடன் முருகனை வழிபட்டதாகவும், அங்குள்ள கேணியில் பூத்த பூவைப் பகைவரை நோக்கி எறி என்று முருகன் நல்லியக்கோடனின் கனவில் தோன்றிக் கூறியதாகவும், அவன் எறிந்த பூ வேலாக மாறிப் பகைவரை அழித்ததாகவும், அதனால், வேலூர் என்ற பெயர் வந்ததாக ஒரு கதை உள்ளது.

 

[5]. பண்டைக் காலத்தில், நெருப்புக் கடவுளாகிய அக்னி தன்னுடைய பசியைப் போக்கிகொள்வதற்காகக் காண்டவ வனத்தை தீக்கிரையாக்கி உண்ண முயன்றபொழுது, இந்திரன் மழை பெய்து, தீயை அணைத்ததாகவும், அக்னி அருச்சுனனின் உதவியை நாடியதாகவும், அருச்சுனன் தன் கணைகளால் பந்தலிட்டு, மழையால் தீ அணையாமல் தடுத்ததாகவும் மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது.

 

Comments

Popular posts from this blog

சிறுபாணாற்றுப்படை - அறிமுகம்

சிறுபாணாற்றுப்படை - பொருட்சுருக்கம்